200 மில்லியன் ஈரோ பரிசை வென்றவர் மருத்துவமனைகளுக்கு உதவ விருப்பம்.

“அதிர்ஷ்டம் திடீரென வானத்தில் இருந்து கொட்டுகின்ற போது அதை வைத்து நம்மைச் சூழவுள்ள அதிர்ஷ்டமற்ற ஏனையோருக்கு உதவ வேண்டும். இல்லையேல் அதில் அர்த்தம் இல்லை.”ஈரோ மில்லியன் சீட்டிழுப்பில் பிரான்ஸின் மிகப்பெரிய தொகையான 200 மில்லியன் ஈரோக்களை வென்ற அதிர்ஷ்டசாலி இவ்வாறு தனது விருப்பத்தை வெளியிட்டிருக்கிறார்.

அவர் தனது பரிசுத்தொகையின் ஒரு பகுதியை மருத்துவமனைகளுக்கும் மருத்துவ சேவையாளர்களுக்கும் வழங்குவதற்கு விரும்புகிறார் என்று பிரான்ஸின் லொத்தர் நிறுவனம்(FDJ) தெரிவித்திருக்கிறது.அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதை வெற்றிகரமாக முன்னெடுத்தால் தனது இலக்கு நிறைவேறும் என்று அவர் கூறுகின்றார்.

பிரான்ஸின் தென் பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரே கடந்த டிசெம்பர் 11 திகதி சீட்டிழுப்பில் 200 மில்லியன் ஈரோ பரிசுத் தொகையை வென்றார். பாதுகாப்புக் கருதி அவரது ஆளடையாளம் , வதிவிட விவரங்கள் பகிரங்கப்படுத்தப் படவில்லை.

“உலகத்தின் நாலாபக்கமும் சுற்றுவது என் முதல் வேலை அல்ல. என்னைச் சூழவுள்ள மகிழ்ச்சியான முகங்களைக் காண்பதே பெரிய சந்தோசம். வைரஸ் நெருக்கடியின் பெரும் பளுவைச் சுமக்கும் பராமரிப்பாளர்களுக்கு உதவுவதே எனது முன்னுரிமை” – என்று அந்தப் பேரதிர்ஷ்டசாலி கூறுகிறார்.

“வேலைக்குப் போகும் மகளுக்கு ஒரு கார் வாங்கி கொடுக்கவேண்டும். மற்றபடி புத்தாண்டு கொண்டாட்டங்களிலோ அதற்கான உணவு வகைகளிலோ எந்த மாற்றமும் இருக்காது. ஏற்கனவே திட்டமிட்ட வழமையான வாழ்வை இந்த அதிர்ஷ்டம் மாற்றி விடாது” என்கிறார் அவர்.

(படம் : FDJ லொத்தர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியிடம் இருந்து பரிசுத் தொகையை வாங்கும் அதிர்ஷ்டசாலி. அவரதுமுகம் மறைந்துள்ளது.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *