சுகாதாரப் பாஸுக்காக”குதிரையோடியவர்” கைது!

ஆள்மாறாட்டம் செய்து பரீட்சையில் பாஸ்பண்ணுவது போன்று தடுப்பூசிப் பாஸ் பெற்றுக்கொள்ளவும்”குதிரையோடுகிற” நிலைமை உருவாகியிருக்கிறது.

வெவ்வேறு ஆட்களின் அடையாள ஆவணங்களுடன் தொடர்ந்து எட்டுத்தடவைகள் தடுப்பூசி ஏற்றியவர் எனக் கூறப்படுகின்ற நபர் ஒருவர் பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.ஒன்பதாவது முறை ஊசி ஏற்றுவதற்கு ஆயத்தமான வேளையிலேயே அவர் சிக்கியுள்ளார்.

பெல்ஜியம் Charleroi பிராந்தியத்தைச்சேர்ந்த அந்த நபர் கைது செய்யப்பட்டசமயம் ஆரோக்கியமான உடல் நிலையுடன் இருந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடுப்பூசி ஏற்ற விரும்பாதவர்களுக்குச் சுகாதாரப் பாஸ் பெற்றுக் கொடுப்பதற்காக அவர்களது அடையாள ஆவணங்களைப் பாவித்துத் தானே ஊசி ஏற்றிக் கொள்ளும் மோசடியில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தமை தெரியவந்துள்ளது.ஒரே தடுப்பூசி நிலையத்தில் இரண்டு வேறு வேறு ஆளடையாள அட்டைகளைக் காண்பித்து ஊசி ஏற்றியதில் அவர் மீது சந்தேகம் கொண்டஅலுவலர்கள் அது பற்றி எச்சரித்ததை அடுத்தே அவர் கைதானார்.

பெல்ஜியம் நாட்டில் மருத்துவர்கள் மற்றும் தடுப்பூசி ஏற்றும் நிலையங்களில்பணியாற்றுவோர் எனப் பலர் போலியான சுகாதாரப் பாஸ் வழங்கியிருப்பதுதெரியவந்திருப்பதை அடுத்துப் பலர்விசாரணை வளையத்தினுள் கொண்டுவரப்பட்டுள்ளனர். நியூசிலாந்தில் அண்மையில் பத்துத் தடவைகள் வைரஸ் தடுப்பூசி ஏற்றிய ஒருவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தார்.

தடுப்பூசிப் பாஸ் நாளாந்த வாழ்விற்கானமுக்கிய ஆவணமாக மாறியிருப்பதை அடுத்துக் கடவுச் சீட்டு, வீஸா போன்றவற்றில் மோசடிகள் நடப்பது போன்று சுகாதாரப் பாஸ் முறைகேடுகள் உலகெங்கும் அதிகரித்துள்ளன.சுகாதாரச் சான்றிதழ் வைரஸ் சோதனைச் சான்றிதழ் போன்றவற்றைத் தயாரித்து விநியோகிக்கின்ற கறுப்புச் சந்தைகள் பலவும் உருவாகி உள்ளன.-

குமாரதாஸன். பாரிஸ்.