கறுப்பினப் பெண்ணின் இனப்போராட்ட நடப்பு குற்றப்பட்டியலிலிருந்து அகற்றப்பட்டது.

அமெரிக்காவில் கறுப்பினத்தினருக்குச் சம உரிமைகள் கிடைக்க முன்னர் பல சட்டங்கள் அவர்களை வெள்ளை இனத்தினரிடமிருந்து ஒதுக்கி வைத்திருந்தன. அவைகளிலொன்றான பேருந்துகளில் “கறுப்பர்களுக்குக் கடைசி ஆசனங்கள்” என்பதை ஏற்க மறுத்தவர் கிளௌடெட் கொல்வின். அவரது குற்றப்பட்டியலில் 66 வருடங்களாக இருந்து வந்த அந்த நடப்பு நீக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.

1955 இல் ஒரு நாள் மொண்ட்கொமரி பொலீசாருக்கு பேருந்துச் சாரதி ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவரது வண்டியில் பயணம் செய்துகொண்டிருந்த மூன்று சிறுமிகள் வெள்ளையருக்கான ஆசனங்களில் இருந்ததாகவும், அவர்களில் இருவர் சாரதியின் சொல்லைக் கேட்டுக் கறுப்பர்களுக்கான கடைசி வரிகளுக்குச் சென்று இருந்ததாகவும், ஒரு 15 வயதுச் சிறுமி மட்டும் அதை மறுத்து வெள்ளை இனப் பெண்ணுக்கருகே உட்கார்ந்திருந்ததாகவும், அந்தக் குற்றச்சாட்டு குறிப்பிட்டது.

பதினைந்து வயதான கொல்வின் கைது செய்யப்பட்டு அவர்மீது “நகரின் இனப்பாகுபாட்டுச் சட்டத்தை மீறியது, சமூக அமைதியைக் குலைத்தது, பொலீசைத் தாக்கியது” ஆகிய குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டாள். பொலீசைத் தாக்கியது தவிர்ந்த முதலிரு குற்றச்சாட்டுகளும் அவள் செய்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

கொல்வின் 15 வயதுச் சிறுமி என்பதால் அவள் “நன்னடைத்தைக்காகக் கண்காணித்தலுக்கு உள்ளாகவேண்டும்” என்று தண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தண்டனை குற்றப் பட்டியலில் 66 வருடமாகத் தொடர்ந்துவந்தது.

தற்போது 82 வயதாகிவிட்ட இவ்வருடம் ஒக்டோபர் மாதத்தில் கொல்வின் நீதிமன்றத்துக்கு எழுதி தனக்கு மேலிருக்கும் அந்தக் குற்றமும், தண்டனையும் நீக்கப்படவேண்டும் என்று கோரியிருந்தார். தான் ஒரு குற்றவாளிப் பட்டியலில் இருப்பது தனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளின் வாழ்க்கைக்குப் பாரமாக இருக்கலாம் என்றும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார். 

குறிப்பிட்ட அந்த சம்பவத்தைத் தவிர கொல்வின் தன் வாழ்நாளில் வேறெந்தக் குற்றமும் செய்து நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதில்லை. அவரது பெயர் குற்றப்பட்டியலில் இருந்து அகற்றப்பட்டதாக நகரின் நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.

கொல்வின் தனது 15 வயதில் செய்த அதையே சில மாதங்களின் பின்னர் கறுப்பினத்தினரின் விடுதலைப் போராளிகளில் ஒருவராகக் குறிப்பிடப்படும் ரோசா பார்க் இனவிடுதலைப் போராட்ட நடவடிக்கையாகச் செய்தார். 42 வயதான ரோசா பார்க்கின் நடப்பு உலகமெங்கும் தெரியவந்தது. அமெரிக்காவில் சம உரிமைக்கான போராட்டத்தின் முதல் கட்டப் போராகவும் அது மாறியது.

சாள்ஸ் ஜெ. போமன்