2017 ல் தென் துருவத்திலிருந்து உடைந்து நகர்ந்துகொண்டிருந்த பனி மலை இரண்டாக உடைந்தது.

தென் துருவத்திலிருந்து 2017 ஜூலை மாதத்தில் உடைந்த 5,800 சதுர கி.மீற்றர் பரப்பளவுள்ள A68a என்று புவியியலாளர்களால் பெயரிடப்பட்ட பனிமலை அத்துருவப் பிராந்தியத்தில் நகர்ந்துகொண்டிருந்தது. அதன் நகர்வு அங்குள்ள தீவுகளிலொன்றான தெற்கு ஜோர்ஜியா தீவைத் தாக்கலாம் என்று கணிக்கப்பட்டிருந்தது.

சமீபத்தில் அளக்கப்பட்டபோது அதன் அளவு 5,100 சதுர கி.மீற்றராகும். கடல்மட்டத்திலிருந்து 30 மீற்றர் உயரமாகப் பல உச்சிகளுடன் அது ஒரு நகரும் தீவு போலத் தோற்றமளிப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். நிரந்தரக் குடிமக்களில்லாத தெற்கு ஜோர்ஜியா தீவில் ஓரிரு அரசாங்கக் கட்டடங்களும், ஆராய்ச்சியாளர் தளங்களுமே இருக்கின்றன. அத்தீவின் முக்கிய குடியிருப்புவாசிகள் பென்குவின்கள், கடல் சிங்கங்கள் மற்றும் பல அரிதான விலங்கினங்களாகும். 

உடைந்துபோன பனிமலையின் ஒரு  பாகத்துக்கு A68d என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அப்பாகம் தொடர்ந்தும் அந்தத் தீவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. மற்றைய பாகம் பிரிந்து வேறொரு திசை நோக்கி நீர்ச்சக்தி இழுத்துச் செல்லும் வழியில் சென்று கொண்டிருக்கிறது.

தெற்கு ஜோர்ஜியா தீவை நோக்கி நகரும் A68d பனிமலை அதை மோதி ஒரு மிகப்பெரும் சூழல் அழிவை உண்டாக்கலாம் என்று அஞ்சுகிறார்கள் விஞ்ஞானிகள். அப்பிராந்தியம் என்றுமில்லாத அளவுக்கு வெம்மையாகி சுமார் 21 ஸெல்ஸியஸ் ஆகிவிட்டது. இதே போன்ற பனிமலையொன்று 2004 இல் அந்தத் தீவை மோதி அங்கிருக்கும் பல விலங்குகளுக்குப் பெரும் அழிவையும், சூழலுக்குச் சேதத்தையும் விளைவித்தது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *