அண்டார்டிகாவில் சுகவீனமுற்ற ஆஸ்ரேலியரை வெளியேற்ற சீனாவும், அமெரிக்காவும் ஒத்துழைப்பு.

சர்வதேச அரசியலிலும், வர்த்தகத்திலும் ஆஸ்ரேலியாவும் சீனாவும் நட்பு நிலையை இழந்திருக்கின்றன. அதேபோலவே சீனாவுடனும் அமெரிக்காவுக்குச் சுமுக நிலை கிடையாது. ஆயினும் இம்மூன்று நாடுகளும் சேர்ந்து ஆஸ்ரேலியாவுக்கு உதவியிருக்கின்றன.

உலகின் மிகக்குளிரான இடமென்று சொல்லப்படும் அண்டார்ட்டிக்காவின் டேவிஸ் ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றும் ஒரு ஆஸ்ரேலியர் நோய்வாய்ப்பட்டிருந்தார். அவரைப் பரிசோதிக்க, சிகிச்சை செய்ய வசதிகளெதுவும் அங்கில்லாததால் பல ஆயிரம் கி.மீ தூரத்தில் ஆஸ்ரேலியாவுக்குக் கொண்டுசெல்லவேண்டியிருந்தது. 

ஆஸ்ரேலியரை அவரது ஆராய்ச்சி மையத்திலிருந்து மிக நீண்ட தூரத்திலிருக்கும் பனித்தளத்திலான ஹெலிகொப்டர் நிலையத்துக்கு பனியை உடைக்கும் கப்பல் மூலம் கொண்டுவரும் பணியைச் சீனா செய்து உதவியது. அதற்காகச் சீனா 1,000 கிலோ பாரமான ஹெலிகொப்டரையும் ஐந்து உதவியாளர்களையும் அனுப்பி நோயாளியை முதலில் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து பனிச்சறுக்கல் மூலம் கொண்டுவந்தது என்று அறிவிக்கப்படுகிறது.

அதன் பின்பு நோயாளியை விமானத்தளத்திலிருந்து ஆஸ்ரேலியாவில் இருக்கும் ஒரு மருத்துவசாலைக்குப் பல ஆயிரம் கி,மீற்றர்கள் விமானத்தில் எடுத்துவந்தது. அண்டார்டிகாவிலிருந்து ஆஸ்ரேலியா வரை நோயாளி வந்து சேர சுமார் ஒரு வாரமாகியதாகக் குறிப்பிடப்படுகிறது.

தமக்குள்ளிருக்கும் மனஸ்தாபங்களை ஒதுக்கிவிட்டு ஒன்றிணைந்து இந்த விடயத்தில் உதவியதற்காக ஆஸ்ரேலியா, சீனாவுக்கும், அமெரிக்காவுக்கு நன்றியைத் தெரிவிக்கிறது. நடாத்தப்பட்ட பரிசோதனைகளின் பின்னர் அந்த ஆராய்ச்சியாளர் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டிருக்கவில்லை என்றும் அறிவிக்கப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *