கருக்கலைப்பு உரிமை பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரமுன் ஒக்லஹோமா மாநிலம் கடும் கட்டுப்பாடு.
அமெரிக்காவெங்கும் கருக்கலைப்பு உரிமை பற்றிய ஆதரவுக் குழுக்கள் தமது போராட்டங்களை அதிகரித்திருக்கின்றன. ஜூன் மாதத்தில் நாட்டின் உச்ச நீதிமன்றத்தால் வெளியிடப்படவிருக்கும் வழிகாட்டல் பற்றிய விபரங்கள் ஊடகங்கள் மூலமாகக் கசிந்ததை அடுத்தே கடந்த மாதங்களாக நாடெங்கும் சூடாக விவாதிக்கப்பட்டு வந்த அப்பிரச்சினை பூதாகரமாகி வருகிறது. அதே சமயம் ஒக்லஹோமா மாநிலத்தின் ஆளுனர் புதியதாக அறிமுகப்படுத்தியிருக்கும் கருக்கலைப்புச் சட்டம் கருத்தரித்த ஆறு வாரங்களின் பின்னர் அதைக் கலைப்பதைத் தடை செய்திருக்கிறது.
அமெரிக்க உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பு உரிமையைப் பறிக்கத் தயாராகிறது. – வெற்றிநடை (vetrinadai.com)
ஒக்லஹோமாவின் ஆளுனரான ரிபப்ளிகன் கட்சி கெவின் ஸ்டிட், “இந்த மாநிலத்தின் நாலு மில்லியன் மக்கள் இங்கே கருக்கலைப்பு நடக்கலாகாது என்று கருதுகிறார்கள். எனவே வாழ்வுக்கு உரிமை கொடுக்கும் இந்தச் சட்டத்தைக் கொண்டுவருவதில் நான் பெருமைப்படுகிறேன்,” என்று குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட சட்டத்தின்படி ஆறு வாரங்களாக வளர்ந்த கருவை அதற்குப் பின்னர் அழிப்பதானால் அது தாயாருடைய உயிருக்கு ஆபத்தானதாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அனுமதிக்கப்படும். மற்றப்படி வன்புனர்வு, இரத்த உறவுக்குள் ஏற்பட்ட கர்ப்பம் போன்ற எந்தக் காரணமானாலும் அது மறுக்கப்படும். சட்டத்தை மீறும் பெண்கள் தண்டிக்கப்படமாட்டார்கள். ஆனால், சட்டத்தை மீறிக் கருக்கலைப்புச் செய்யும் மருத்துவர்களுக்கு 10 வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
சாள்ஸ் ஜெ. போமன்