உள்ளூராட்சித் தேர்தல்களில் போரிஸ் ஜோன்சன் கட்சி லண்டன் நகரங்களை இழந்து பின்னடைவு.
நாட்டின் அரசியல் நிலைமையை நாடிபிடித்துப் பார்ப்பது போன்றது ஐக்கிய ராச்சியத்தில் நடக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள். நடுத்தவணைத் தேர்தல்கள் என்று குறிப்பிடப்படும் அவை ஆளும் கட்சிக்கான ஆதரவு நாட்டில் எப்படியிருக்கின்றது என்பதைப் பற்றிச் சொல்பவை. மே 5 ம் திகதி நடந்த தேர்தல்களில் ஆளும் கொன்சர்வடிவ் கட்சி இங்கிலாந்தில் கணிசமான பின்னடைவைப் பெற்றிருக்கிறது. ஸ்கொட்லாந்து, வேல்ஸ், அயர்லாந்து பகுதிகளில் முழுமையான முடிவுகள் இன்னும் வரவில்லை.
முக்கியமாக, லண்டன் நகர்ப்பகுதிகளிலிருக்கும் மாநகராட்சிகளில் மக்கள் தமது அதிருப்தியைக் காட்டி முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அந்த மாநகராட்சிகளின் சரித்திரத்திலேயே முதல் தடவையாக இந்தத் தேர்தலில் தான் தொழிலாளர் கட்சி பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது.
“மிகவும் பாரமான இரவாக இருந்தது. நாட்டின் சில பகுதிகளில் இழப்பு ஏற்பட்டாலும் மேலும் சில பாகங்களில் எங்களுக்கு ஆதரவு கிடைத்திருக்கிறது,” என்று தனது கட்சியின் பின்னடைவைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் ஜோன்சன் நாட்டின் மற்றைய பகுதிகளில் அதேயளவு மோசமாகத் தனது கட்சி தோல்விகளைத் தழுவவில்லை என்று சொல்லித் தேர்தல் முடிவுகளின் முக்கியத்துவத்தை குறைத்துக் காட்டினார்.
தொழிலாளர் கட்சி மட்டுமன்றி லிபரல் டெமொகிரடிக் கட்சி, சுற்றுப்புற சூழல் ஆதரவாளர்கள் கட்சி போன்றவையும் தேர்தல் முடிவுகளில் முன்னோக்கிச் சென்றிருக்கின்றன.
“இது ஒரு முக்கியமான திருப்பம்,” என்று தொழிலாளர் கட்சித் தலைவர் கெயர் ஸ்டெர்னர் தேர்தல் முடிவுகளைப் பற்றி உற்சாகத்துடன் பேசினார்.
நகரங்கள், மாநகரங்களின் சேவைகளான துப்பரவு செய்தல், குப்பைகளை அகற்றுதல் அதற்கான கட்டணங்கள், வரிகள் போன்றவைகளே இத்தேர்தல்களில் வெளிச்சமிட்டுக் காட்டப்படுகின்றன. சமீப காலத்தில் போரிஸ் ஜோன்சன் மீதும் அவரது சகாக்கள் மீதும் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளும் அதனால் ஏற்பட்ட அதிருப்தியின் நிழலும் கூட இந்தத் தேர்தலின் முடிவுகளில் தெரிவதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
சாள்ஸ் ஜெ. போமன்