இசைத்துறைச் சந்தையில் புரட்சியை ஏற்படுத்திய ஐ-பொட் நிரந்தரமாகத் துங்கப் போகிறது.
அப்பிள் நிறுவனம் தனது அதிபிரபலமான தயாரிப்புப் பொருள் ஒன்றை இனிமேல் தயாரிக்கப்போவதில்லை என்று அறிவித்தது. mp3 இசை வடிவத்தைப் பிரபலப்படுத்தி வேறு பல வடிவங்களில் சந்தைப்படுத்தப்பட்டு வந்த இசை வடிவங்களை ஒதுக்கித்தள்ளிய ஐ-பொட் [Ipod] இனிமேல் தமது நிறுவனத்தால் தயாரிக்கப்படாது என்று இன்று தெரிவிக்கப்பட்டது.
23 ம் திகதி ஒக்டோபர் 2001 இல் அப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜொப் ஐ-பொட்-ஐ உலகுக்கு அறிமுகம் செய்தார். ‘ஒரேயொரு இயந்திரத்துக்குள் ஆயிரம் இசைப் படைப்புக்களைப் பூட்டிவைத்து இஷ்டப்படி கேட்கமுடியும்,’ என்பது அச்சமயத்தில் ஒரு புரட்சியாகக் கருதப்பட்டது. அதுவரை ஒரு பாடலை அதன் தொகுப்புடன் வாங்கவேண்டியிருந்த நிலைமை மாறி வெவ்வேறு தொகுப்புக்களின் தனித்தனிப் பாடல்களைச் சேகரித்து ஒருவர் ஐ-பொட் -க்குள் வைத்துக்கொள்ள முடிந்தது.
விளைவாக 2011 இல் mp3 இசை இயந்திரங்களின் 70 % ஐ அப்பிள் தன் கைவசப்படுத்தியிருந்தது. சுமார் 400 மில்லியன் ஐ-பொட் இயந்திரங்கள் உலகம் முழுவதும் விற்பனையாகியிருந்தன. அதன் பின் சந்தைக்கு வந்த மற்றைய இசை வடிவத் தயாரிப்புக்கள் ஐ-பொட்- ஐப் படிப்படியாக ஒதுக்கித் தள்ளியிருக்கின்றன.
ஐ-பொட் நானோ, ஐ-பொட் ஷபிள் ஆகியவற்றைத் தயாரிப்பது ஏற்கனவே நிறுத்தப்பட்டிருக்கிறது. அவற்றில் கடைசியாகத் தயாரித்து நிறுத்தப்பட இருப்பது ஐ-பொட் டச் ஆகும். கையிருப்பு முடியும் வரை அவை விற்பனை செய்யப்படும் என்று அப்பிள் அறிவித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்