ஐரோப்பாவில் 2024 இல் சகலவித கைபேசிகளுக்கும் சக்தியூட்ட ஒரே விதமான பாவனைப் பொருட்கள் இருக்கவேண்டும்!

ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்கப்படும் கைபேசிகள், காமராக்கள், டப்லெட் போன்றவைகள் அனைத்துக்கும் சக்தியூட்ட ஒரே விதமான பாவனைப் பொருட்கள் இருக்கவேண்டும் என்று செவ்வாயன்று தீர்மானிக்கப்பட்டது. சுமார் ஒரு தசாப்தத்துக்கும் அதிகமாக வாதப்பிரதிவாதங்களுக்கு உட்பட்டிருக்கும் இவ்விடயத்திற்கான முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. 2024 ம் ஆண்டில் அதற்கான தீர்வைத் தயாரிப்பாளர்கள் சந்தைக்குக் கொண்டுவந்திருக்கவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் ஆணையிட்டது.

ஐ-போன், ஆண்டிரோய்ட் பாவனையாளர்கள் தாம் வெவ்வேறு பொருட்களைப் பாவிக்கும்போது மின்சாரச் சக்தியூட்ட வெவ்வேறு தொடர்புகளைப் பாவிக்கவேண்டியிருப்பது பற்றிக் குறைப்பட்டு வந்திருக்கிறார்கள். இப்படியான செயலால் இயற்கை வளங்களும் அனாவசியமாகப் பாவிக்கப்படுவதுடன் சேதாரக் குப்பைகளும் அதிகரிக்கின்றன. 

2018 இல் விற்கப்பட்ட கைப்பேசிகளில் பாதிக்கு USB micro-B என்ற சக்தியூட்டும் இணைப்பு பாவிக்கப்பட்டது. 29 விகிதமானவை  USB-C ஆலும் மேலும் 21 %   Lightning connector,ஆலும் சக்தியூட்டப்பட்டன. 

2024 இல் சகலவிதமான கைபேசிகளுக்கும் சக்தியூட்ட USB-C என்ற இணைப்பு மட்டுமே பாவிக்கப்படும். இந்த மாற்றம் பாவனையாளர்களுக்கு 250 மில்லியன் டொலர் பெறுமதியான மிச்சப்படுத்தலை உண்டாக்கும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *