வட கொரியாவில் ஆறு கொவிட் மரணங்கள், இலட்சக்கணக்கானோருக்கு காய்ச்சல்.
கொவிட் 19 தொற்றுள்ளவர்கள் சீனாவிலிருந்து ஆரம்பித்து உலக நாடுகள் பலவற்றிலும் காணப்பட்டபோது சீனாவின் எல்லை நாடான வட கொரியா இதுவரை தமது நாட்டில் அவ்வியாதி எவருக்குமே இல்லை என்றே குறிப்பிட்டு வந்தது. முதல் தடவையாக ஓரிரு தினங்களுக்கு முன்னர் ஒருவருக்கு அத்தொற்று இருப்பது காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. தற்போது மரணங்களும் நடந்திருப்பதாக வட கொரியச் செய்தி நிறுவனம் அறிவித்திருக்கிறது.
எதனால் என்று அறியப்படாத காரணங்களால் நாட்டில் ஏப்ரல் மாதத்தில் இருந்தே பலர் காய்ச்சலால் அவதிப்படுகிறார்கள். 300,000 பேர் காய்ச்சலால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். சுமார் 187,800 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். படு வேகமாகப் பரவக்கூடிய ஓமெக்ரோன் திரிபு வட கொரியாவைத் தாக்கியிருப்பதாகத் தெரிகிறது. அதன் ஒரு வகையான BA.2 ஆல் ஒருவர் மரணமடைந்திருக்கிறார். மொத்தமாக ஆறு பேர் மரணமடைந்திருக்கிறார்கள்.
வட கொரியா பஞ்சம், பலவீனமான மக்களைக் கொண்ட நாடு. நாட்டின் மக்கள் ஆரோக்கிய சேவை மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள நாடு. 2019 இல் வெளியாகிய அறிக்கயொன்றில் உலக நாடுகள் 195 இல் வட கொரியாவின் மக்கள் ஆரோக்கிய சேவை 193 வது இடத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, கொவிட் 19 பரவல் மிகவும் மோசமான விளைவுகளை உண்டாக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
நாட்டின் தலைவர் கிம் யொங் உன் முதல் தடவையாகத் தொலைக்காட்சியில் தோன்றும்போது முகக்கவசம் அணிந்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. தமது நாடு மிகப்பெரும் ஆபத்தொன்றை எதிர்கொண்டிருப்பதால் அதனால் ஏற்படக்கூடிய அழிவை மட்டுப்படுத்த நாடெங்கும் கடுமையான பொது முடக்கம் கொண்டுவரப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்