தலிபான்களின் புதிய சட்டம் தம்பதிகளானாலும் உணவகங்களில் ஒன்றாகச் சாப்பிடலாகாது என்கிறது.
சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் ஆட்சியிலிருக்கும் தலிபான்கள் நாட்டில் வாழும் பெண்கள் முகம் முழுவதையும் மறைக்கும் புர்க்கா அணிந்து தான் பொது வெளியில் திரியலாம் என்ற சட்டம் கொண்டுவந்தார்கள். தமது ஆட்சி 1990 காலத்தில் தாம் மக்களை நடத்தியது போல இருக்காது என்று மீண்டும் மீண்டும் உறுதியளித்த தலிபான்கள் மீண்டும் தமது பழைய ஆட்சிக்கால வழியிலேயே திரும்பிவருகிறார்கள் என்பது சமீபத்தில் கொண்டுவரப்படும் மாற்றங்களால் தெரியவருகிறது.
நோர்வேயில் நடந்த மனிதாபிமான உதவியளிக்கும் நாடுகள், அமைப்புக்களின் மாநாட்டில் பங்குபற்றி ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கும் கல்வியை பெற்றுக்கொள்ள ஆவன செய்வதாக உறுதிகூறிய அவர்கள் சிறுமிகளின் பாடசாலைகளைத் திறப்பதாகக் கூறி ஏமாற்றினார்கள்.
ஆப்கானிஸ்தான் ஹெராத் நகரில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சட்டத்தின்படி ஆண்களும் பெண்களும் ஒன்றாகச் சேர்ந்து பூங்கா போன்ற இடங்களில் நடமாடுவது தடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் உணவகங்களிலும் ஆண்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் தனித்தனியான பகுதிகள் இருக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. தம்பதிகளாக இருப்பினும் கூட அவர்கள் உணவகங்களில் அருகருகில் இருந்து சாப்பிடலாகாது என்கிறது புதிய சட்டம்.
ஆப்கானிஸ்தான் மக்களில் பாதிப்பேர் பட்டினியால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பெண்கள் மீது படிப்படியாகக் கொண்டுவரப்படும் மூச்சை நெருக்கும் சட்டங்களால் சர்வதேச உதவி அமைப்புக்களும் அங்கே சேவை செய்வதிலிருந்து ஒதுங்கிவருகின்றன. ஜி 7 என்ற உலகின் பணக்கார நாடுகளின் அமைப்பு, “பெண்கள் மீது தலிபான்கள் எடுத்துவரும் கடுமையான கட்டுப்பாடுகள் அவர்க்ளைச் சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்துகின்றன. எனவே, அவர்கள் தமது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம்,” என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
சாள்ஸ் ஜெ. போமன்