உணவுப்பொருட்கள் விலையுயர்வை எதிர்த்துக் குரலெழுப்பியவர்களைக் கைது செய்தது ஈரான்.
சர்வதேச ரீதியில் ஏற்பட்டிருக்கும் உணவுப் பொருட்களின் விலையுயர்வு ஈரான் மக்களையும் பாதித்திருக்கிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு மான்யம் கொடுத்து அவைகளைக் அடித்தட்டு மக்களும் வாங்கிக்கொள்ள உதவும் நாடுகளிலொன்று ஈரான். அப்படியான பொருட்கள் சிலவற்றுக்கு விலையை உயர்த்தியதால் ஈரானின் தெற்குப் பிராந்திய நகரங்களில் எதிர்ப்புப் போராட்டங்கள் உண்டாகின. அந்தப் போராட்டங்களில் பங்குபற்றியவர்களில் 22 பேரைக் கைது செய்திருப்பதாக ஈரான் அரசு அறிவித்திருக்கிறது.
மேலுமொரு நகரில் ஏற்பட்ட எதிர்ப்புகளைக் கட்டுப்படுத்த முற்பட்ட பொலீசார், தீயணைப்புப் படையினரை அந்த மக்கள் கற்களால் தாக்கினர். அச்சயமத்தில் சில படையினர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. நாட்டின் பல பகுதிகளுக்கும் கலவரங்கள் பரவுவதையும், அவைகளின் விளைவுகள் வெளியாவதையும் தடுக்குமுகமாக இணையத்தள இயக்கம் அவ்வப்போது முடக்கப்பட்டு வருகிறது.
இவ்வார ஆரம்பத்தில் ஈரான் கோழி இறைச்சி, முட்டைகள், சமையல் எண்ணெய், பால்பொருட்கள் ஆகியவைகளின் விலை சுமார் 300 % ஆல் அதிகரிப்பதாக அறிவித்திருந்தது.
தனது தேவைக்கான சமையல் எண்ணெயில் அரைப்பங்கை உக்ரேனிலிருந்தும், கோதுமையில் பாதியை ரஷ்யாவிலிருந்தும் ஈரான் இறக்குமதி செய்து வருகிறது. அப்பிராந்தியப் போரினால் ஏற்பட்டிருக்கும் அப்பொருட்களுக்கான விலை உயர்வில் ஒரு பகுதியை அரசு கொள்வனவாளர் மீது சுமத்தியிருக்கிறது.
மட்டுமன்றி பக்கத்து நாடுகளான ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளிலும் உணவுப் பொருட்களின் விலை எகிறியிருப்பதுடன் தட்டுப்பாடும் நிலவுகிறது. இன்னொரு பக்கத்தில் அரசியல் ஸ்திரமின்மையும் வறட்சியும் நிலைமையை மேலும் மோசமாக்கியிருக்கின்றன. அதனால், ஈரானில் மான்ய விலைக்கு விற்கப்படும் உணவுப்பொருட்களை வாங்கிப் பக்கத்து நாடுகளுக்குக் கடத்துபவர்களும் அதிகமாகியிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்