சூழல் மாசுபடுதலால் அதிக இறப்புக்களைச் சந்திக்கும் நாடுகளில் முதலிடம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும்.
போக்குவரத்து வாகனங்கள், தொழிற்சாலைகள் வெளியேற்றும் நச்சுக் காற்று உட்பட்டவைகளால் மாசுபடுத்தப்படும் சூழல் உலகில் வருடாவருடம் குடிக்கும் உயிர்களின் எண்ணிக்கை 9 மில்லியன் என்கிறது The Lancet Planetary Health வெளியிட்டிருக்கும் ஆராய்ச்சிக் கட்டுரை. அவர்களில் 2.4 மில்லியன் மரணங்கள் இந்தியாவிலும் 2.2 மில்லியன் மரணங்கள் சீனாவிலும் ஏற்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
சூழல் மாசுபடுதலால் அமெரிக்காவில் 2019 இல் இறந்தோர் எண்ணிக்கை 142, 883 ஆகும். எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் ஏழாவது இடத்திலிருக்கும் நாடான அமெரிக்கா மட்டுமே அப்பட்டியலில் இருக்கும் முதல் 10 நாடுகளில் தொழில்மயமாக்கப்பட்ட நாடு ஆகும். இறப்புக்களை நாட்டின் மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால் அமெரிக்காவில் 100,000 பேருக்கு 43.6 இறப்புக்கள் உண்டாகின்றன. அந்த ஒப்பீட்டில் அமெரிக்கா கடைசியிலிருந்து 31 வது இடத்திலிருக்கிறது.
100,000 பேருக்கு வருடாவருடம் எத்தனை சூழல் மாசுபாட்டு இறப்புக்கள் என்று ஒப்பிடும்போது ஆபிரிக்க நாடுகள் சில மோசமான நிலையிலுள்ளன. அங்கே, 100,000 க்கு சுமார் 300 மரணங்கள் ஏற்படுகின்றன. அவர்களுடைய குடிநீர் அசுத்தமாக இருப்பதே அதன் முக்கிய காரணமாகும். கத்தார், ஐஸ்லாந்து, புருனெய் ஆகிய நாடுகளில் சூழல் மாசுபாட்டாலான இறப்புகள் மிகக்குறைவாக இருக்கின்றன.100,000 க்கு சுமார் 15. 23 இறப்புக்களே ஏற்படுகின்றன.
சூழல் மாசுபாட்டின் பக்க விளைவுகளின் மரணங்களின் சான்றிதழ்கள் அவர்கள் அக்காரணத்தால் இறந்ததாகக் குறிப்பிடப்படுவதில்லை. பக்கவாதம், திடீர் இருதய நிறுத்தம், நுரையீரல் புற்றுநோய் உட்பட்ட சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகள், நீரிழிவு ஆகியவையே காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. அந்த நோய்களால் ஏற்படும் இறப்புக்களுக்கான மூலக் காரணம் பெரும்பாலும் சூழல் மாசுபாடுகளே.
“ஒன்பது மில்லியன் மரணங்கள் என்பது மிக அதிகமானது. அந்த இறப்புக்கள் ஒவ்வொன்றும் தடுக்கப்படக் கூடியவையே. வாகனங்கள் வெளியிடும் நச்சுக்காற்றால் ஏற்படும் சூழல் மாசுபாடுகள் சமீப வருடங்களில் அதிகரிக்கின்றன, அதனாலான இறப்புக்கள் அதிகரிக்கின்றன என்பது மேலும் வேதனைக்குரியது,” பிலிப் லாண்டிரிகன், சர்வதேசச் சூழல் மாசுபாடு அவதானிப்பு, ஆராய்ச்சி மையம்.
சாள்ஸ் ஜெ. போமன்