பிரதமர் ரணிலின் மீள்வருகை


எழுதுவது : வீரகத்தி தனபாலசிங்கம்

    தென்னிலங்கை மக்களின் அமோக ஆதரவுடன் மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு வந்த ராஜபக்சாக்கள் இரண்டரை வருட காலத்திற்குள் அதே மக்களினால் படுமோசமாக வெறுக்கப்பட்டு அபகீர்த்திக்குள்ளாக்கப்படுவார்கள் என்று யாருமே  எதிர்பார்க்காததைப் போன்றே கடந்த பொதுத் தேர்தலில் முற்றாக  துடைத்தெறியப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின்  தலைவரான ரணில் விக்கிரமசிங்க மீண்டும் விரைவாக நாட்டின் பிரதமராக பதவியேற்கின்ற சூழ்நிலையொன்று உருவாகும் என்றும் எவரும் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள்.  அவர் பிரதமராக வந்திருப்பதை அதிசயம் என்பதா அல்லது விசித்திரம் என்பதா என்று புரியவில்லை.
   விக்கிரமசிங்க ஏற்கெனவே ஐந்து தடவைகள் பிரதமர் பதவியை வகித்திருக்கிறார்.இது அவருக்கு ஆறாவது தடவை. பிரதமராக அவர் ஒருபோதுமே முழு பதவிக்காலத்துக்கும் பதவியில் நீடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
   1977 ஜூலை பொதுத்தேர்தலில் ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி 5/6 பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றி பிரமாண்டமான வெற்றியை பெற்றபோது கொழும்புக்கு வெளியே பியகம தொகுதியில் இருந்து தெரிவுசெய்யப்பட்டு விக்கிரமசிங்க முதற்தடவையாக  மிகவும் இளவயதில் பாராளுமன்றம்  வந்தார்.அன்று தொட்டு இன்றுவரை தொடர்ச்சியாக சுமார் 45  வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துவரும் அவர் 2020 ஆகஸ்ட் பொதுத்தேர்தலில் தனது கட்சி ஒரு ஆசனத்தைக்கூட கைப்பற்றமுடியாமல் போனதையடுத்து ஒரு பத்து மாதங்கள் பாராளுமன்றத்துக்கு வரவில்லை. அத்தேர்தலில் நாடளாவிய ரீதியில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த வாக்குகளின் அடிப்படையில்  கிடைக்கக்கூடியதாக இருந்த ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனத்தை பயன்படுத்தி கடந்தவருடம் ஜூனில் மீண்டும் அவர்  பாராளுமன்றத்துக்கு வந்தார். 
   தனது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தன்னந்தனியனாக பாராளுமன்றத்தில் இருக்கும் விக்கிரமசிங்கவும் கூட ஒரு ராஜபக்சவை ஜனாதிபதியாகக்கொண்ட  அரசாங்கத்தில் பிரதமராக பதவியேற்கவேண்டிவரும் என்று நினைத்துப்பார்த்திருக்கமாட்டார். ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த பிரதமர் ராஜபக்சாக்களினால் ராஜபக்சாக்களுக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்றக் குழுவின் தயவுடன் பதவியில் இருக்கிறார். அந்த பாராளுமன்றக்குழு அவரது சகல விருப்பங்களுக்கும்  ஆதரவுதரும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.இதை கடந்தவாரம் பாராளுமன்றத்தில் உப சபாநாயகர் தெரிவின்போது தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது.
   ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் சியம்பலப்பிட்டிய உப சபாநாயகர் பதவியைத் துறந்ததையடுத்து காலியாக இருந்த அப்பதவிக்கு பெண்மணியொருவர் தெரிவுசெய்யப்படவேண்டும் என்ற தனது விருப்பத்தை விக்கிரமசிங்க முன்கூட்டியே வெளிப்படுத்தியிருந்தார்.எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது சமகி ஜன பலவேகய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ரோஹனி கவிரத்னவை அந்த பதவிக்கான வேட்பாளராக முன்னிறுத்தினார்.பொதுஜன பெரமுனவும் கூட திருமதி ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே போன்ற ஒரு பெண்மணியை களமிறக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,அந்த கட்சி ராஜபக்சாக்களின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான அஜித் ராஜபக்சவை(இவர் ராஜபக்சாக்களின் உறவினர் அல்ல) வேட்பாளராக நியமித்தது.


   கடந்த செவ்வாய்கிழமை சபையில் நடைபெற்ற இரகசியவாக்கெடுப்பில் அஜித் ராஜபக்ச 109 வாக்குகளைப் பெற்று உப சபாநாயகராக தெரிவானார். உப சபாநாயகர் தெரிவில் பொதுஜன பெரமுன பாராளுமன்றக் குழு நடந்துகொண்ட விதம் பிரதமருக்கு காண்பிக்கப்பட்ட முதன்முதலான எச்சரிக்கைச் சமிக்ஞையாகும்.அவரின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் எல்லாவற்றையும் தாங்கள் முழுமையாக ஆதரிக்கப்போவதில்லை என்பதை அவர்கள் வெளிக்காட்டியிருக்கிறார்கள்.
  பிரதமரும் கூட கடந்தவாரம் பாராளுமன்றத்தில் ஒரு தடவை உரையாற்றியபோது தான் எந்தத் தரப்பில் இருக்கிறாரோ என்று தெரியவில்லை என்று சுவாரஸ்யமாக குறிப்பிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.
           கிளர்ந்தெழுந்திருக்கும் நாட்டு மக்களினால்   பதவியில் இருந்து விலகி வீட்டுக்கு போகுமாறு கேட்கப்படும் ஜனாதிபதி கோதாபய  ராஜபக்ச நெருக்கடியை சமாளிக்கமுடியாமல் வேறு வழியின்றியே விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தார்.மற்றைய ராஜபக்சாக்களின் சம்மதமின்றி அவர் இதைச் செய்திருக்கமாட்டார் என்று நம்பலாம்.பிரதமராக பதவியேற்க முன்வருமாறு சஜித் பிரேமதாசவை  அழைத்தபோது அவர் ஜனாதிபதி பதவிவிலகவேண்டும் என்பது உட்பட சில நிபந்தனைகளை முன்வைத்ததால் விக்கிரமசிங்கவை நியமிக்கத் தீர்மானித்ததாக ஜனாதிபதி கூறியிருந்தார். விக்கிரமசிங்க பதவியேற்கப்போகிறார் என்று தெரிந்ததும் பிரேமதாச ஜனாதிபதிக்கு அவசரமாக கடிதம் அனுப்பி பிரதமராவதற்கு தயாராயிருப்பதாக அறிவித்தார்.தனது நிபந்தனைகளையும் அவர் தளர்த்தியிருந்தார்.அதாவது ஜனாதிபதி கோதாபய உடனடியாக பதவிவிலகத் தேவையில்லை ; குறிப்பிட்ட ஒரு காலவரையறைக்குள் பதவிவிலக இணங்கவேண்டும் என்று பிரேமதாச கேட்டார். ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டது. 
  பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்கத்தயாராகிறார் என்பதை அறிந்துகொண்டுதான் விக்கிரமசிங்க ஜனாதிபதியுடன் அவசரமாக பேச்சுவார்த்தை நடத்தி தான் பிரதமராவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கக்கூடும் என்று நம்ப இடமிருக்கிறது.பிரதமராக பிரேமதாச நியமிக்கப்பட்டால் ஜனாதிபதி கோதாபய தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரேயே பதவிவிலக வேண்டிவந்தால் பதில் பிரதமராக பிரேமதாசவே பதவியேற்கவேண்டியிருக்கும். இது ராஜபக்சாக்களுக்கு ஏற்புடையதாக இருக்காது. ஆனால், விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவியேற்கக்கூடிய சாத்தியத்துக்கு ராஜபக்சாக்கள் எதிரானவர்களாக இருக்கமாட்டார்கள்.இந்த விடயமும் பிரதமர் நியமனத்தில் செல்வாக்கு செலுத்தியிருக்கக்கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
   அரசியலமைப்பு ஏற்பாடுகளின் பிரகாரம் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெறக்கூடிய வாய்ப்பைக்கொண்டவராக தான் கருதும்  ஒருவரையே பிரதமராக நியமிக்கவேண்டும்.ஆனால், தனியொரு ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராக பாராளுமன்றத்தில் இருக்கும் விக்கிரமசிங்கவை எந்த அடிப்படையில்  கோதாபய நியமித்தார் என்ற கேள்வியும் எழுந்தது.அந்த நியமனத்தில் ஒரு  தார்மீகமுறை இருக்கவில்லை. ஆனால் அரசியலுக்கும் தார்மீக நெறிமுறைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதே நியதியாகிப்போய்விட்டது. 
    பொதுஜன பெரமுன பாராளுமன்றக் குழு ராஜபக்சாக்களின் கட்டுப்பாட்டில் தான் முழுமையாக இருக்கிறது. தங்களின் விருப்புவெறுப்புக்களுக்கு ஏற்ப  அவர்களை ஆட்டிப்படைக்கலாம் என்ற உறுதியான நம்பிக்கையிலேயே ராஜபக்சாக்கள்  இருக்கிறார்கள்.  அதனால்  ராஜபக்சாக்களின் வியூகங்களுக்கு இசைவான முறையில்தான் அந்த பாராளுமன்றக்குழுவின் ஆதரவும் ஒத்துழைப்பும் பிரதமர் விக்கிரமசிங்கவுக்கு  கிடைக்கும் என்று நம்பலாம்.பிரதமர் அனுபவம் நிறைந்த–விவேகமான அரசியல்வாதி.அவரை பணயம் வைத்து தங்களது காரியத்தை ராஜபக்சாக்கள் சாதிப்பது என்பதும் பெரிதாக சாத்தியமாகாது.அவர் தனக்கென்றும் தனது கட்சிக்கென்றும் ஒரு அரசியல் நிகழ்ச்சிநிரலை மனதில் வைத்திருக்காமல் பிரதமராக அதும் இலங்கையில் முன்னென்றும் இல்லாத வகையிலான  அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்குள் பிரதமராக முன்வந்திருப்பாரா?

    பிரதமராக தான் பதவியேற்பதானால், ஜனாதிபதி கோதாபய குறிப்பிட்ட ஒரு காலவரையறைக்குள் பதவிவிலக இணக்கம் தெரிவிக்கவேண்டும் என்பது பிரேமதாசவின் நிபந்தனையாக இருந்த அதேவேளை, இடைக்கால அரசாங்கத்தில் தாங்கள் பங்கேற்பதாக இருந்தால்  ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்று ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி. பி.)வின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க நிபந்தனை விதித்தார். ஆனால், விக்கிரமசிங்க தான் பிரதமராக பதவியேற்பதற்கு முன்வைத்த நிபந்தனை ஜனாதிபதி கோதாபய கொழும்பு காலிமுகத்திடல் ‘கோட்டா கோகம’ போராட்டக்காரர்கள் மீது கைவைக்கக்கூடாது என்பதேயாகும். மூவரும் ஜனாதிபதி பதவிவிலகவேண்டும் என்ற கோரிக்கையைத்தான் முன்வைத்தார்கள்.ஆனால் அதைக் கேட்ட முறையில் வேறுபாடு இருக்கிறது.ஜனாதிபதியை உடனடியாக விலகிவீடு செல்லவேண்டும் என்று கோரியே காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் ஒரு மாதத்துக்கும் அதிகமான காலமாக ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டிருக்கிறார்கள்.அதனால் நிச்சயமாக கோதாபய கடும் ஆத்திரம்  அடைந்திருப்பார்.அவரிடமே நேரடியாக அந்த போராட்டக்காரர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது என்று வலியுறுத்துகிற இராஜதந்திரம் ரணிலைத் தவிர வேறுயாருக்கு வரும் என்று ருவிட்டர் சமூகத்தளத்தில் ஒரு பத்திரிகையாளர் செய்த பதிவை இங்கு வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள கட்டுரையாளர் விரும்புகிறார்.
   கோட்டாகோகம போராட்டக்காரர்களின் நலன்களைக் கவனிக்க பிரதமர் விக்கிரமசிங்க கொழும்பு மேயர் றோசி சேனநாயக்க தலைமையில் குழுவொன்றையும் கடந்தவாரம் நியமித்திருந்தார். அந்தக்குழு காலிமுகத்திடலுக்கு சென்று போராட்டக்காரர்களுடன் பேசியதாகவோ அவர்களின் நலன்கள் தொடர்பில் ஏதாவது நடவடிக்கை எடுத்ததாகவோ இதுவரை செய்தி வரவில்லை.என்றாலும், ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் வீட்டுக்கு போகுமாறு கோரும் போராட்டக்காரர்களின் நலன்களைக் கவனிக்க  குழுவொன்றை பிரதமர்  நியமிப்பது உலகில் வேறு எங்கும் நடக்காத ஒரு விசித்திரம்.மக்கள் போராட்டங்கள் தணிந்துவிட்டால் ஜனாதிபதி ராஜபக்சவை கையாளுவது தனக்கு கஷ்டமாக இருக்கும் என்பது பிரதமருக்கு நன்கு தெரியும். இது உண்மையில் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகிற வேலைதான்.
    விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதை நாடளாவிய மக்கள் எழுச்சியின் அடையாளச்சின்னமாக விளங்கும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் வரவேற்கவில்லை.ஆனால், பிரதமர் நியமனத்துக்கு பிறகு அந்த போராட்டத்தின் ‘சூடு’ சற்று தணிந்திருப்பதாக கொழும்பு ஆங்கிலப்பத்திரிகையொன்று கடந்தவாரம் ஆசிரிய தலையங்கத்தில் குறிப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.அது எந்தளவுக்கு சரியான மதிப்பீடு என்று கணிப்பதற்கு சில நாட்கள் வேண்டும்.
  இது இவ்வாறிருக்க, நாம் முக்கியமான ஒரு விடயத்தை இங்கு அவதானிக்கவேண்டும். பொருளாதார நெருக்கடியை இதற்கு மேலும் சமாளிக்கமுடியாத தறுவாய்க்கு மக்கள் வந்துவிட்டார்கள். ஆனால் பிரதமரும் மத்திய வங்கி ஆளுநர் மற்றும் பொருளாதார நிபுணர்களும் அடுத்த சில மாதங்கள் மேலும் கூடுதலான கஷ்டங்களை மக்கள் அனுபவிக்கவேண்டிவரப்போகிறது என்று தொடர்ச்சியாக அபாயச்சங்கு  ஊதிக்கொண்டிருக்கிறார்கள்.இத்தகைய சூழ்நிலையில்,பொருளாதார நெருக்கடியை ஓரளவுக்கேனும் தணித்து மக்களுக்கு அத்தியாவசிய உணவு வகைகளும் மருந்துப்பொருட்களும் எரிபொருட்களும் கிடைப்பதற்கு ஏற்பாடுகள் துரிதமாக செய்யப்படவேண்டும்.அதை நோக்கியே தான் செயற்பட்டு்கொண்டிருப்பதாகவும் வெளிநாடுகளிடமும் சர்வதேச நிதி நிறுவனங்களிடமும் உதவிகளை கோருவதாகவும் பிரதமர் அறிவித்தார்.அவருக்கு சர்வதேச ரீதியில் அதுவும் குறிப்பாக மேற்குநாடுகள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது என்பது உண்மை.ஆனால் அந்த செல்வாக்கினால் இன்றைய மாறிவரும் சர்வதேச புவிசார் அரசியல் நிலைவரங்கள் மத்தியில்  எந்தளவுக்கு எமது  மக்களின் கஷ்டங்களை தணிப்பதற்கு  உதவமுடியும் என்பது முக்கியமான கேள்வி.
  இடைக்கால அரசாங்கத்தையோ அல்லது தேசிய அரசாங்கத்தையோ அமைத்து தங்களின் பொருளாதார இடர்பாடுகளைத் தணிப்பதற்கு துரித நடவடிக்கைகள் எடுக்கப்டவேண்டும் என்பது மக்களில்  பெரும்பாலானோரின்  எதிர்பார்ப்பாக இருக்கிறது. இது ஒன்றுதான் விக்கிரமசிங்க ஆறுதலடையக்கூடய ஒரு அம்சமாகும். 
   நாட்டு மக்கள் மூன்று வேளை உணவு உண்பதை உறுதிப்படுத்தவும் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்கவுமே தான் பதவியை ஏற்றதாக கூறும் பிரதமர் கடந்தவாரம் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் ஆற்றிய உரை எமது பொருளாதாரம் வீழ்ந்துகிடக்கும் அதலபாதாளத்தை படம்பிடித்துக்காட்டியது. தியாகங்களுக்கு தயாராகுமாறு நாட்டு மக்களை அவர் வேண்டவும் தவறவில்லை.
 மக்களின் மனநிலையை உணர்ந்த காரணத்தினால்தான் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல எதிரணி கட்சிகளும் பிரதமர் நாட்டை மீட்டெடுக்க முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை தர முன்வந்திருக்கின்றன. சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பலவேகய, மைத்திரிபால சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய பத்து கட்சிகள் சகலதுமே ஒத்துழைப்பை வழங்க உறுதியளித்துள்ளன.ஜே.  வி.பி. மாத்திரமே ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச பதவி விலகாத நிலையில் எந்த ஒத்துழைப்பையும் வழங்கத் தயாரில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தது.ஜே.வி.பி.யைப் பொறுத்தவரை, விக்கிரமசிங்கவை ராஜபக்சாக்களின் பதிலாளாகவே (Proxy) பார்க்கிறது.
   இந்த கட்டுரை எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் வரை, விக்கிரமசிங்கவின் கீழான புதிய அமைச்சரவை முழுமையாக  நியமிக்கப்படவில்லை. முன்னர் அரசியல்வாதிகள் அமைச்சர் பதவிகளுக்காக ஒருவர்மேல் ஒருவராக ஏறி முண்டியடிப்பார்கள்.தற்போதைய மக்கள் எழுச்சி புகட்டியிருக்கும் பாடங்கள் காரணமாக அரசியல்வாதிகள் பதவிகளை ஏற்க கடுமையாக தயங்குகிறார்கள்.  ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சர் பதவிகளை வழங்க தேடுதல்வேட்டை நடத்துகிறார்கள் போலும்.
  இதனிடையே, மக்களின் அபகீர்த்திக்குள்ளாகி ஒதுங்கியிருக்கும் ராஜபக்சக்களை பாதுகாக்கவே விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார்என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.நாட்டை பொருளாதார இடர்நிலையில் இருந்து மீட்டு மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கவே தான் பிரதமர் பொறுப்பை ஏற்றதாகவும் ராஜபக்சாக்களையோ அல்லது வேறு எந்த அரசியல் குடும்பத்தையுமோ பாதுகாப்பது தனது வேலை அல்ல என்றும் அவர் திரும்பத்திரும்பக் கூறுகிறார். என்றாலும் அவர் பொறுப்பில் அரசாங்கம் இருப்பது தங்களைப் பொறுத்தவரை பாதுகாப்பானது என்ற உணர்வு ராஜபக்சாக்களுக்கு இருக்கிறது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். 
    ராஜபக்சாக்களை பாதுகாக்க அல்ல,  பொருளாதார அனர்த்தத்தில் இருந்து நாட்டை மீட்கவே தான் பொறுப்பேற்றதை பிரதமர் தனது நடவடிக்கைகள் மூலமாக நிரூபிக்கவேண்டும் என்று வெளிநாட்டு பத்திரிகைகள்கூட ஆசிரிய தலையங்கங்களில் வலியுறுத்திக் கேட்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. அந்த அளவுக்கு அவருக்கும் ராஜபக்சாக்களுக்கும் இடையிலான உறவு குறித்த சந்தேகங்கள் பலமானவையாக இருக்கின்றன என்பதை மறுக்கமுடியாது.
   பிரதமர் பதவியேற்ற பிறகு கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது குடும்பத்துக்கு நெருக்கமான பிரபலமான பௌத்தவிகாரைக்கு சென்று வழிபட்டுவிட்டு வெளியே வந்த விக்கிரமசிங்கவிடம் ” தனியொரு  பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு பிரதமர் பதவியைப் பொறுப்பேற்றதில் நெறிமுறை இருக்கிறதா” என்று பிரிட்டிஷ் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டார். 
   அதற்கு பதிலளித்த பிரதமர்,” முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்ரன் சேர்ச்சில் 1939 ஆம் ஆண்டில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை வைத்துக்கொண்டே உலகமகா யுத்த நெருக்கடி காலத்தில் தேசிய அரசாங்கத்தை அமைத்தார். நானும் நெருக்கடி காலத்தில் அதையே செய்கிறேன்.முதலில்  உங்கள் வரலாற்றை படியுங்கள் ” என்று சற்று கோபத்துடன் கூறினார்.


  சேர்ச்சில் தலைமையில் பிரிட்டன் உலகப்போரின்போது சோவியத் யூனியனுடனும் அமெரிக்காவுடனும் கூட்டணி அமைத்து ஹிட்லரின் நாஜி ஜேர்மனியை தோற்கடித்தது.ஆனால் உலகப்போரின் முடிவில் 1945 ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சேர்ச்சில் தோல்வி கண்டார் என்பது வரலாறு.
  பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க பிரதமர் முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகளை இன்றைய இக்கட்டான நிலையில் விமர்சிப்பதில் ஒரு காலப்பொருத்தமான நிதானம் தேவை என்ற ஒரு அபிப்பிராயம் அவதானிகள் மத்தியில் இருக்கிறது. ஆனால்,  பொருளாதார இடர்பாடுகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த நாட்டு மக்களின் போராட்டங்கள் ஒரு அரசியல் அமைதிப்புரட்சியின் பரிமாணங்களை எடுத்து  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு உட்பட பெருவாரியான அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து ‘ முறைமை மாற்றம்’ (System Change)ஒன்றை வேண்டி நிற்கும் நிலையில், அவற்றுக்கு வழிசமைக்கக்கூடிய ஒரு தலைவராக விக்கிரமசிங்கவை நோக்கமுடியுமா என்பது இன்னொரு முக்கியமான  கேள்வி.

நன்றி ; ஈழநாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *