அமெரிக்காவில் குழந்தைப்பால்மா தட்டுப்பாடு, போர்க்கால நடவடிக்கையாக ஐரோப்பாவிலிருந்து தருவிக்கப்படுகின்றன.
அமெரிக்காவில் தாய்ப்பால் குடிக்காத இலட்சக்கணக்கான குழந்தைகளுக்கான செயற்கைப்பால்மாவுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. காரணம் அவற்றின் அமெரிக்கத் தயாரிப்பு நிறுவனமொன்று தமது தொழிற்சாலைகளில் அவற்றைத் தயாரிப்பதைத் தற்காலிகமாக நிறுத்தியிருப்பதாகும். நிலைமையைச் சமாளிக்க 1950 இல் கொண்டுவரப்பட்ட போர்க்கால நிலைமைச் சட்டமொன்றை ஜனாதிபதி ஜோ பைடன் இயக்கத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார். அதன் மூலம், பாலர்களுக்கான அந்தப் பால்மா ஐரோப்பியத் தயாரிப்பாளர்களிடமிருந்து வேகமாக விமானம் மூலம் தருவிக்கப்படுகிறது.
சிறுகுழந்தைகளுக்கான பால்மா பிரச்சினையானது அமெரிக்காவில் கொவிட் 19 பரவிய காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது. தொழிற்சாலைகள் செயற்பாடு நிறுத்தம், தயாரிப்புக்கான மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு, பொது முடக்கங்களால், போக்குவரத்து நிறுத்தம், பொருளாதாரப் பிரச்சினை போன்றவைகளால் தேவையான அளவு பால்மாவைத் தயாரிப்பாளர்களால் விற்பனைக்குக் கொண்டுவர முடியவில்லை. அதே சமயம், கொவிட் 19 பொதுமுடக்கங்களின் விளைவுகளால் பயந்த கொள்வனவாளர்களை கடைகளில் இருந்தவற்றைப் பெருமளவில் வாங்கிச்சென்று வீடுகளில் பதுக்கினார்கள்.
அமெரிக்காவில் குழந்தைப் பால்மாத் தயாரிக்கும் ஒரு சில நிறுவனங்களில் ஒன்றான Abbott Nutrition இவ்வருட ஆரம்பத்தில் தனது தயாரிப்புக்களை நிறுத்தவேண்டியதாயிற்று. காரணம் அந்த நிறுவனத் தயாரிப்பைப் பாவித்த குழந்தைகள் சிலருக்கு அந்தப் பாலிலிருந்த கிருமிகள் மூலம் வியாதிகள் வந்ததால் அதுபற்றிய ஆராய்வுகள் நடக்க ஆரம்பித்தன. விளைவு, ஏற்கனவே தேவையான அளவு விற்பனையில் இல்லாமலிருந்த குழந்தைகளுக்கான பால்மாவுக்கான தட்டுப்பாடு படு வேகமாக அதிகரித்துப் பல பகுதிகளில் அவை கிடைக்கவில்லை.
நிலைமையை எதிர்கொள்ள “Operation Fly Formula” என்ற பெயரில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து தேவையான அளவு குழந்தைப் பால்மாவை அமெரிக்காவுக்குக் கொண்டுவரும் திட்டத்தில் ஜோ பைடன் கையெழுத்திட்டார். பாதுகாப்பு அமைச்சுக்கு அவர் கொடுத்த உத்தரவின்படி தயாரிக்கப்பட்ட குழந்தைப் பால்மாவை நெஸ்ட்லெ, அபொட் நிறுவனங்களிடம் இருந்து வாங்கி சாதாரணப் போக்குவரத்து விமானங்களை வாடகைக்கு அமர்த்தி அவற்றை அமெரிக்காவில் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது.
அமெரிக்காவில் மூடப்பட்டிருக்கும் குழந்தைகளின் பால்மா தயாரிப்பு நிறுவனம் தனது தயாரிப்புக்களை மீண்டும் ஆரம்பிக்கக் காலமெடுக்கும் என்று அறிவித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்