கொரோனாக்காலகட்டத்தில் குறைந்து வந்த மரண தண்டனைகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கிறது.
மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்னஷனலில் வருடாந்தர அறிக்கை வெளியாகியிருக்கிறது. அந்த அறிக்கைகளிலிருக்கும் விபரங்களின்படி 2020 இல் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கை சர்வதேச ரீதியில் குறைந்திருந்ததாகவும் அதன்பின்னர் மீண்டும் உயர்ந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கடந்த வருடம் உலகின் 18 நாடுகளில் மொத்தமாக 579 பேரின் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அது 2020 ஐ விட சுமார் 20 விகிதத்தால் அதிகமாகியிருக்கிறது. அதே சமயம் 2021 இல் 56 உலக நாடுகளில் 2052 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய வருடத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட 40 % அதிகமானதாகும்.
அம்னெஸ்டியின் விபரங்களில் சீனா, வட கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளின் மரணதண்டனைகள் பற்றிய விபரங்கள் சேர்க்கப்படவில்லை. அவ்விபரங்களை அந்த நாடுகள் வெளியிடுவதில்லை. உண்மையில் சீனாவில் தான் வருடாவருடம் மிக அதிகமானவர்கள் -பல்லாயிரக்கணக்கானோர் – மரண தண்டனைக்கு உள்ளாகிறார்களென்று அம்னெஸ்டி சுட்டிக் காட்டியிருக்கிறது.
மரண தண்டனைகள் பற்றிய ஒரு நல்ல விடயமும் அறிக்கையில் குறிப்பிடப்படிருக்கிறது. மரண தண்டனைகளைத் தமது நாடுகளில் நிறைவேற்றாமல் நிறுத்திவிடும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. சியாரா லியோனே, கஸக்ஸ்தான் ஆகிய நாடுகள் அப்படியான முடிவை எடுத்திருக்கின்றன. பாபுவா நியா கினியா, மத்திய ஆபிரிக்கக் குடியரசு, மலேசியா, கானா ஆகிய நாடுகளும் தமது நாடுகளில் மரண தண்டனைகளை நிறைவேற்றாமலிருக்கும் நாடுகளாக மாறவிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றன. அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலம் அந்த நாட்டில் மரண தண்டனையை நிறுத்தும் 23 வது மாநிலமாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்