சோவியத் யூனியன் காலத்திலிருந்தது போன்ற மாணவர்\இளைஞரணி மீண்டும் ரஷ்யாவில் உயிர்பெறுகிறது.
ரஷ்யப் பாராளுமன்றம் சில நாட்களுக்கு முன்னர் எடுத்திருக்கும் முடிவின்படி நாட்டுப் பாடசாலைகளில் படிக்கும் மாணவர்களுக்கான அமைப்பு ஒன்று கட்டியெழுப்பப்படும். சோவியத் யூனியன் காலத்தில் இருந்த இளவயதினருக்கான அமைப்பின் 100 வது ஆண்டு ஞாபக தினம் கொண்டாடப்பட்ட தினத்தன்று அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
கொம்யூனிஸ்ட் கட்சியால் ஆளப்பட்ட சோவியத் யூனியனில் ஏழு வயதான ஒவ்வொருவரும் இளைஞரணியின் முதல் படியான பாலர்கள் அமைப்பில் சேரவேண்டும் என்பது கட்டாயமாகும். சர்வதேச அளவில் இருக்கும் சாரணர் அமைப்புக்கு இணையான சோவியத் யூனியனில் செயற்படுத்தப்பட்ட அந்த அமைப்பு அரசியல் கோட்பாட்டைக் கொண்டது. சிறு வயதிலிருந்தே பிள்ளைகளுக்குக் கொம்யூனிசத்தின் முக்கியத்துவததைக் கற்பிப்பது, அதன் இயக்கத்தில் ஊறவைப்பது அதன் முக்கிய நோக்காக இருந்தது.
சோவியத் யூனியனின் இளைஞரணியினர் இசை, பாதுகாப்பு, சிரமதானம் போன்று வெவ்வேறு குழுவினராகப் பிரிக்கப்பட்டிருந்தார்கள். சீருடை அணிந்து கழுத்தில் சிகப்பு நிறத்திலான துணித்துண்டொன்றைக் கட்டியபடி அணிவகுப்புகளிலும் தமது மற்றைய நடவடிக்கைகளிலும் ஈடுபடுவார்கள். சோவியத் யூனியன் சிதறுண்டபோது அந்த இளைஞரணிக்கான அரச உதவிகள் நிறுத்தப்பட்டு அது படிப்படியாக இல்லாமல் போனது.
ரஷ்யப் பாராளுமன்றம் தற்போது கொண்டுவந்திருக்கும் இளைஞரனி நாட்டின் பாடசாலைகள் அனைத்திலும் ஆரம்பிக்கப்படும். அரசியல் கோட்பாடு எதையும் கொண்டிருக்காது. ரஷ்யாவின் கலாச்சாரம், பாரம்பரியம், சரித்திரம் ஆகியவை அந்த அணியில் சேர்பவர்களுக்குக் கற்பிக்கப்படும். அரசியலில் ரஷ்யா எந்தெந்த முடிவுகளை எடுத்து இயங்குகிறது என்றும் மாணவர்கள் அறிந்துகொள்வார்கள். தேசியம் பற்றிய எண்ணத்தில் அவர்களை ஊறவைத்து நாட்டைக் காப்பாற்றுவதன் அவசியம் பற்றியும் போதிக்கப்படும். சோவியத் காலம் போன்று இந்த அணியில் சேர்வது கட்டாயமாக இருக்காது.
“பாரிய மாறுதல்கள்” என்ற பெயரில் ஆரம்பிக்கப்படவிருக்கும் மாணவர்\இளைஞரணியின் தலைவராக ஜனாதிபதி புத்தின் இருப்பார்.
சாள்ஸ் ஜெ. போமன்