பாலஸ் தீன மோதல்-மேற்குலகின் ஆதரவை இழக்கிறதா உக்ரைன்?-சுவிசிலிருந்து சண் தவராஜா
பலஸ்தீன மோதல் – மேற்குலகின் ஆதரவை இழக்கிறதா உக்ரைன்?
சுவிசிலிருந்து சண் தவராஜா
காஸா மீதான இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல் ஒரு மாதத்தையும் கடந்து தொடர்கிறது. அந்தப் பிராந்தியத்தில் தினமும் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இதுவரை கிடைத்த தகவல்களின்படி கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தையும் தாண்டி விட்டது. அதில் மூன்றிலொரு விழுக்காட்டினர் சிறார்கள் என்கின்ற செய்தி பதைபதைப்பைத் தருகின்றது. இருந்தும் மேற்குலகை ஆள்வோரின் மனச்சாட்சி இன்னமும் அசைந்து கொடுக்கவில்லை என்பதைப் பார்க்க முடிகின்றது. உலகின் பெரும்பான்மையான நாடுகள் நிபந்தனையற்ற உடனடிப் போர் நிறுத்தத்துக்காகக் குரல் தந்து கொண்டிருக்கையில் ‘ஒப்புக்குச் சப்பாணி’ என்பதைப் போன்று ‘மனிதாபிமான மோதல் தவிர்ப்பு’ என்பதைப் பற்றியே மேற்குலகம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகின்றது.
இந்த வேளையில் உலகின் மனச்சாட்சி உள்ள நாடுகள் இஸ்ரேலுடனான தமது இராஜதந்திரத் தொடர்புகளைத் துண்டிப்பதன் ஊடாக தமது கடுமையான நிலைப்பாட்டை இஸ்ரேலுக்கும், முழு உலகிற்கும் பறைசாற்றி வருகின்றன. இந்த வரிசையில் இறுதியாக ஆபிரிக்க நாடுகளான தென்னாபிரிக்கா மற்றும் சாட் ஆகியவை இணைந்து உள்ளன. ஏற்கனவே பொலிவியா, துருக்கி, யோர்தான், ஹொன்டுராஸ், கொலம்பியா, சிலி ஆகிய 7 நாடுகள் இஸ்ரேலுடனான தமது ராஜதந்திர உறவுகளைத் துண்டித்து உள்ளமை தெரிந்ததே. தொடர்ந்துவரும் நாட்களில் இந்த அணியில் மேலும் பல நாடுகள் சேர்ந்து கொள்ளும் அறிகுறிகள் தென்படுகின்றன.
மறுபுறம், அரபு நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிரான உணர்வு அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகின்றது. தமது சகோதரர்கள் காஸாவில் வகைதொகையின்றிக் கொல்லப்படுவது தொடர்பில் அரபுலக மக்கள் மத்தியில் உருவாகியுள்ள ஆத்திரம் ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் ஊடாக வெகுவிரைவில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கலாம்.
அதேவேளை, காஸா மோதல் ஆரம்பமான நாள் முதலாக உக்ரைன் போர் தொடர்பிலான செய்திகள் இரண்டாம்பட்ச நிலைக்குச் சென்றிருப்பதை அவதானிக்க முடிகின்றது. அத்தோடு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உக்ரைனின் ‘பதில் தாக்குதல் நடவடிக்கை’ உரிய பலனைத் தராத நிலையில், ஒருசில விட்டுக்கொடுப்புடன் ரஸ்யாவுடன் சமரசத்துக்குச் செல்லுதல் தொடர்பான செய்திகளும் சமாந்தரமாக வெளியாகத் தொடங்கியுள்ளன.
இவ்வாறான செய்திகளை வழக்கம் போன்றே உக்ரைன் அரசுத் தலைவர் விளாடிமிர் ஷெலன்ஸ்கி மறுத்திருந்தாலும் ‘நெருப்பில்லாமல் புகை வராது’ என்பதைப் போன்று திரைமறைவில் ஏதோ காய்நகர்த்தல்கள் உள்ளதாகவே தெரிகின்றது என்கின்றன விஷயமறிந்த வட்டாரங்கள்.
உக்ரைனின் இராணுவத் தலைமைக்கும் அரசுத் தலைமைக்கும் இடையில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது என்ற விடயம் தொடர்பில் அண்மைக்காலமாக அரசல் புரசலாக செய்திகள் வெளியாகி இருந்தன. அதனை மெய்ப்பிப்பது போன்று தற்போதைய கள நிலவரம் தொடர்பில் அண்மையில் படைத் தளபதி தெரிவித்த கருத்தும் அதற்கு அரசாங்கத் தரப்பில் இருந்து வெளியான விளக்கமும் அமைந்திருந்தது. “ரஸ்யாவுடனான மோதல் ஒரு தேக்கநிலையை அடைந்திருக்கிறது. தற்போதைய நிலையில் எந்தவொரு அணியும் பாரிய வெற்றி எதனையும் பெற்றுவிட முடியாத நிலை உள்ளது. அது முதலாம் உலகப் போரை ஒத்த ஒரு நிலை.” என ஜெனரல் வலரி சலுஸ்னி பிரித்தானியாவின் ‘த எக்கோனமிஸ்ட்’ ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்து இருந்தார்.
அவரது கருத்துக்குப் பதிலளித்த அரசுத் தலைவர் அலுவலக உதவியாளர் இகோர் சொவ்க்வா, ஜெனரல் வலரி சலுஸ்னியின்; கருத்தைக் கண்டித்ததுடன் அந்தக் கருத்து ரஸ்யத் தரப்புக்கு ஆதரவு அளிப்பது போன்று உள்ளதாகத் தெரிவித்தார். அத்தோடு இந்தக் கருத்து வெளியான கையோடு மேற்குலக ராஜதந்திரிகள் பலரும் தன்னைத் தொடர்பு கொண்டு அவர் கூறியது உண்மையா எனக் கேட்டனர் எனவும் கூறியிருந்தார்.
அதேவேளை, கடந்த 6ஆம் திகதி ஜெனரல் வலரி சலுஸ்னியின் நெருங்கிய சகா ஒருவர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டிருந்தார். மேஜர் கென்னடி சாஸ்ற்யக்கோவ் தனது பிறந்தநாளை ஒட்டி வழங்கப்பட்ட பரிசுப்பொதியை தனது மகனுடன் இணைந்து பிரிக்கும் போது பரிசாக வழங்கப்பட்ட கைக்குண்டு வெடித்ததில் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. இச்சம்பவத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சம்பவ இடத்தில் மேலும் பல கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, இது திட்டமிட்ட தாக்குதல் எனவும், அந்தத் தாக்குதலில் ஜெனரல் வலரி சலுஸ்னியே இலக்கு வைக்கப்பட்டிருக்கக் கூடும் என ஒரு ஊகமும் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே, உக்ரைன் தரப்பு கலகலத்துப் போயுள்ள நிலையில் படைத்துறைக்கும் அரசுக்கும் இடையில் பிளவு உள்ளதாக வெளியாகும் செய்திகளும், உக்ரைனை மேற்குலகு படிப்படியாகக் கைகழுவி வருவதாக வெளியாகும் செய்திகளும் உக்ரைனின் போர் வெற்றி தொடர்பில் மேற்குலகம் நம்பிக்கையிழந்து வருவதன் அறிகுறியே என நோக்கர்கள் தெரிவிக்கின்றார்கள்.
உக்ரைனின் அரசு இயந்திரம் ஊழலில் மூழ்கித் திளைக்கின்றது என்ற செய்தி ஒன்றும் புதியதல்ல. அண்மைக் காலமாக இது விடயத்திலும் மேல்நாட்டு ஊடகங்கள் முக்கியத்துவம் தந்து செய்திகளை வெளியிட ஆரம்பித்துள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் அடுத்த வருடம் அரசுத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு தேர்தல் நடக்குமானால் ஷெலன்ஸ்கி மாற்றப்பட வேண்டும் என்ற வகையிலான தகவல்களையும் மேற்குலக ஊடகங்களில் அவதானிக்க முடிகின்றது.
இரண்டு வருடங்களை நிறைவு செய்யவுள்ள போரில் உக்ரைன் தரப்பு பாரிய மனித இழப்பைச் சந்தித்துள்ளது. படையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக வயோதிபர்களைக் கூட கட்டாயமாகப் படையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தமை தெரிந்ததே. உக்ரைன் தரப்புக்கு உதவி செய்யும் மேற்குலகம் மேலதிக உதவிகளை, படைத் தளபாடங்களை வழங்கத் தயாராக இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்த மனிதவலு அவசியம் என்பது தொடர்பில் குறித்த நாடுகள் கரிசனை கெண்டிருப்பதும் செய்திகளில் அடிபடுவதைப் பார்க்க முடிகின்றது.
மேற்குலக ஊடகங்கள் மற்றும் அவற்றுக்குத் தகவல்களை வழங்கும் வட்டாரங்களின் கருத்துகளைச் சீர்தூக்கிப் பார்க்கையில் மேற்குலகின் நிகழ்ச்சி நிரலில் முதன்மை இடத்தில் இருந்த உக்ரைன் தற்போதைய காஸா மோதல் காரணமாக தனது முதன்மையை இழந்திருக்கின்றது என்பது தெட்டத் தெளிவாகின்றது.
காரணம் எதுவானாலும் உக்ரைன் போர் முடிவுக்கு வருமானால் அது அமைதியையும் சமாதானத்தையும் விரும்பும் அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியே. உலக சமாதானத்துக்கும் அது அவசியமானது என்பதுவும் மறுக்க முடியாத உண்மை.
நன்றி வீரகேசரி