முடி சூடா மன்னன்..!
🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤 *அறிஞர் அண்ணா* *பிறந்த தினக் கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்
🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤
நடராஜன் முதலையாரும்
பங்காரு அம்மையாரும்
தாம்பத்திய தறியில்
1909 செப்டம்பர் 15
அண்ணாதுரை துணியை
நெசவு செய்துக்கொடுத்தனர்…..
உனது பெற்றோர்கள்
நெசவாளர்கள் என்று தெரியும்…
இப்படி ஒரு தரமான துணியை
நெசவு செய்யக் கூடியவர்கள் என்று
தெரிந்திருக்கவில்லை……
அன்று யாரும்
அறிந்தார் இல்லை
இந்தத் துணி
‘இடைத்துணி’யாகாமல்
‘கொடிதுணி’யாகும் என்று…..
பச்சையப்பன் பள்ளியிலும்
பச்சையப்பன் கல்லூரியிலும்
படித்ததால் தான் என்னவோ
நீ ‘பச்சைத்தமிழனாய்’
வாழ்ந்தாய்,…….
நீ ஆங்கில ஆசிரியர் ஆனாய்
இல்லை இல்லை…
‘ஆங்கிலத்திற்கே
ஆசிரியரானாய்…..!!’
முடி சூடா ‘ராஜாவாக’
இருந்திருக்கிறாய்
‘ராணி’யம்மையாரே
உனக்கு
வாழ்க்கைத் துணையாக
வந்தார்….. !!!!
உனக்கு
‘ஒரு வாரிசு’ கொடுக்க
இறைவன் மறந்துவிட்டார்…
அதனால் என்ன ?
‘தமிழ்நாட்டையே’
உனக்கு
‘வாரிசாக்கி’ விட்டாரே….!!
ஆசிரியர் பேருந்தில்
பயணம் செய்த நீ
அதிலிருந்து இறங்கி
பத்திரிக்கை ஆசிரியர்
பேருந்தில் ஏறி
பயணத்தை தொடர்ந்தாய்
அதில்
பயணியாக இருந்த நீ
ஓட்டுநராகவே
மாறிவிட்டாய்………..
படிப்பாளி என்றுதான்
நினைத்திருந்தார்கள்….
நீயே! எழுதி
நியே! நடித்து
நியே!
நடத்திய நாடகங்கள் தான்
நீ படைப்பாளியும் கூட என்று
உலகிற்கு
உரக்கச் சொன்னது…….
எல்லோரும்
திரைப்படத்திற்குக்
கதை வசனம் எழுதினர்
கல்லாவை
நிரப்புவதற்கு……
நீயோ !
கதை வசனம் எழுதினாய்
உன் ‘கொள்கைகளை’
பரப்புவதற்கு……
உனது வேர்கள்
ஆரம்பத்திலிருந்து
நீதியைத் தேடிச் சென்றது
அதனால் தான்
முடிவில்
நீதிக் கட்சியை அடைந்தது…..
பெரியார்
உன்னை
கட்சியாளராகச் செதுக்கினார்
நீயோ! திமுக கட்சியையே
செதுக்கி விட்டாய்….!!!
உனது கட்சிக்குக்
கட்டுப்பாட்டை உடலாகவும்
கடமையை உயிராகவும்
கண்ணியத்தை ஆடையாகவும்
கொடுத்து
உயிர்த்தெழச் செய்தாய்…..
மதராஸ் மாநிலத்திற்கு
‘தமிழ்நாடு’என்று
பெயர் சூட்டி
தமிழை அலங்கரித்து
அழகு பார்த்த தந்தை நீதானே..!!!.
பெரியாருக்கு
உனக்கும்
கருத்து வேறுபாடு வந்தது….
அது பிள்ளைக்கும்
பெற்றோருக்கும்
வந்த கருத்து வேறுபாடு…..
நீ ஒரு தீர்க்கதரிசி
கொடியில்
இரண்டு விரல்களைக்
காட்டினாய்
தமிழ்நாட்டுக்கு முதல்வர் பதவியேற்று
இரண்டு ஆண்டில்
நீ இறந்து விட்டாய்….
“மாற்றான் தோட்டத்து
மல்லிகைக்கும்
மனம் உண்டு” என்றாய்…..
அதனால்தான்
‘மாற்றான்’ மனதிலும்
நீ பூத்திருக்கிறாய்….
“கத்தியைத் தீட்டாதே
புத்தியைத் தீட்டு” என்றாய்….
அதனால் தான்
உன் வார்த்தைகள்
கூர்மையானதாக இருந்தது…
“எதையும் தாங்கும்
இதயம் வேண்டும்” என்றாய்
அதனால் தான்
உன் இதயத்தில்
இரண்டு ‘இமயங்களையே !’
சுமந்தாய்…..
உன்னை
அசிங்கப்படுத்த
அனுப்பிய
வார்த்தைகளை கூட
அலஙாகரித்து
திருப்பி அனுப்பி வைத்தாய் ….
பலர் பேச
ஆரம்பித்தால்
உட்கார்ந்து இருப்பவர்கள் கூட
எழுந்து சென்று விடுவார்கள்
நீ பேச
ஆரம்பித்தால்
உட்கார்ந்து இருப்பவர்கள் கூட எழுந்து வருவார்கள்….
சொல்லுக்கு
அகத்தியன் ஆனவன் கூட
உன் சொல்லைக் கேட்டிருந்தால்
உனக்கு ரசிகனாகி
இருப்பான்……
நீ ஆங்கிலம் பேச
ஆரம்பித்தால்
ஆங்கிலேயர்கள்
பேசுவது கூட
உளறலாகத் தான் தெரியும்…
தத்துவங்களை எல்லாம்
வாயினால் மட்டும்
சொல்லிக் காட்டவில்லை
வாழ்த்தே காட்டியவன் நீ !
அதனாலேயே
உனக்கு ‘அறிஞர்’ என்ற
பட்டத்தை அளித்தார்களோ……?
ஆசிரியராக…
பத்திரிக்கையாளராக….
பத்திரிக்கை ஆசிரியராக….
சமுதாய
சிந்தனை உள்ளவராக…
சமூக ஆர்வலராக…
நாடக ஆசிரியராக….
நடிகனாக… .
நல்லவனாக….
கதையாசிரியராக….
தொண்டனாக….
கட்சித் தலைவனாக…
அரசியல்வாதியாக….
இலக்கியவாதியாக…..
மக்கள் பிரதிநிதியாக….
வசனக் கரத்தாகவாக….
முதல்வராக…..
நீ அவதாரங்கள் எடுத்தாய்…
அடேங்கப்பா…!!!
உனக்கு முன்னால்
ஆண்டவனே
தோற்றுத்தான் போனான்
அவதாரம் எடுப்பதில்….!!!
அரசியல் இன்றி
அரசாங்கம் இருந்தாலும்
நீ இன்றி அரசியல் இல்லை….!
வாழ்க உன் புகழ் !
வளர்க உன் பெருமை! *கவிதை ரசிகன்*
🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤