கொக்கைன் போதைப்பொருள் கடத்திய 29 வயது இந்திய பெண் கைது!

நாட்டுக்கு கொக்கைன் போதைப்பொருளை கடத்தி வந்த, இந்திய பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று (06) பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டார்.
இப்பெண், ரூ. 6 கோடியே 57 இலட்சத்து 60 ஆயிரம் பெறுமதியான கொக்கேன் போதைப்பொருளை தனது பயணப்பொதியில் மறைந்துவைத்து கடத்தியுள்ள நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் மிசோராமைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப் பெண் சென்னையிலிருந்து நேற்று அதிகாலை வந்த விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது, அவரது கடவுச்சீட்டை பரிசோதனைக்குட்படுத்தியதில், அவர் இதற்கு முன்பு 3 முறை நாட்டுக்கு வருகை தந்துள்ளமை தெரியவந்துள்ளது.
பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய அவரது பயணப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ. 6 கோடியே 57 இலட்சத்து 66 ஆயிரம் பெறுமதியுடைய 01 கிலோ 644 கிராம் கொக்கேன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, கைதுசெய்யப்பட்ட பெண் வழங்கியுள்ள தகவலின்படி, கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் வைத்து மேற்படி போதைப்பொருளை பெற்றுக்கொள்ள தயாராக இருந்த இலங்கைப் பிரஜை ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாலபே பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய வர்த்தகர் என தெரியவந்துள்ளது.