அதிகார மாற்றத்திற்கு ட்ரம்ப் நிர்வாகம் தயாராகிறது!
ஒரு வழியாகத் திங்களன்று ஜனவரி 20 இல் புதிய ஜனாதிபதிகாகப் பதவியேற்கவிருக்கும் ஜோ பைடனுடைய செயற்குழுவினரிடம் அதிகாரங்கள் பற்றிய விபரங்களைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் டொனால்ட் டிரம்ப்.
அரசியல் ஒழுங்கின்படி ஆட்சி மாற்றம் வரை செயற்பாடுகளுக்கான நிதியையும் அவர்களுக்குக் கொடுக்கும் ஏற்பாடுகளைச் செய்திருப்பதாக ஜோ பைடன் தரப்பில் அறிவிக்கப்படுகிறது.
அதே சமயத்தில், தான் தேர்தலில் தோற்றுப்போனதை ஏற்றுக்கொள்ளத் தொடர்ந்தும் மறுத்துவருகிறார் டிரம்ப். பென்சில்வேனியா, ஜோர்ஜியா போன்ற சில மாநிலங்களில் மீண்டும் மீண்டும் வழக்குகள் போட்டும், மாநில உயரதிகாரங்களை வளைத்துப் போட்டு அதன் தேர்தல் முடிவுகளை அதிகாரபூர்வமாக அறிவிப்பதைத் தள்ளிப்போடும்படி கேட்டும் வருகிறார்.
ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள் மாநில அரசுகளால் அறிவிக்கப்படவேண்டிய தினம் டிசம்பர் 08 திகதியாகும்.
டிரம்ப்பின் ரிபப்ளிக் கட்சி ஆட்சியிலிருக்கும் மாநிலங்கள் கூட இதுவரை அவரது கோரிக்கைக்கும், மிரட்டல்களுக்கும் பணியாமல் “தேர்தல் ஒழுங்காக நடந்து வாக்கு எண்ணிக்கையும் தவறுகளெல்லாம் திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுவிட்டன,” என்று குறிப்பிடுகின்றன. ரிபப்ளிகன் கட்சியின் முக்கிய தலைவர்களில் டிரம்ப் ‘தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளவேண்டும், அமெரிக்கத் தேர்தலையும் அரசியலையும் நகைச்சுவைக்கும், அவமானத்துக்கும் உள்ளாக்கலாகாது’, என்ற பகிரங்கமாகக் குறிப்பிடுவோரின் எண்ணிக்கையும் சமீப நாட்களில் அதிகரித்து வருகிறது.
அதிகார மாற்றத்துக்கான ஏற்பாடுகளை டிரம்ப் நிர்வாகம் செய்திருப்பதை அறிந்துகொண்ட உலக வர்த்தகம் ஒரு ஆனந்தக் குதியல் போட்டிருக்கிறது. பல முக்கிய நாடுகளின் பங்குச் சந்தைகளும் உயர்வைக் காட்டியிருப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன.