மிதிவண்டிகளின் மீதான காதலும் கொரோனாக்காலமும் ஜேர்மனியில் ஏற்படுத்தியிருக்கும் புதிய நிலைமை.
சுற்றுப்புற சூழல் பேணல் பற்றிப் பலமாக வீசிக்கொண்டிருந்த காற்றும் அதையொட்டி வந்த கொரோனாத்தொற்று அலைகளும் சேர்ந்து மிதிவண்டிகள் மீதான ஆர்வத்தை உலகெங்கும் ஒரு சுனாமி அலையாக மாற்றியிருக்கின்றன. அதன் தாக்கங்களை வெவ்வேறு நாடுகளில், நகரங்களில் வெவ்வேறு விதமாகக் காணக்கூடியதாக இருக்கிறது.
ஜெர்மனியின், பெர்லின் நகரம் இதற்கெல்லாம் முன்னரே “துவிச்சக்கரவாசிகளின் சொர்க்கம்” என்று கருதப்படும் நகரங்களில் ஒன்றாகும். துவிச்சக்கரவாசிகளையும் நினைத்தே அமைக்கப்பட்டிருக்கும் நகரம் எப்போதுமே பலரையும் கவர்ந்தது. எனவே கொரோனாக்காலம் மேலும் பல பெர்லீன்வாசிகளை மிதிவண்டிகளைப் பாவிக்கத் தூண்டியதில் ஆச்சரியமேதுமிருக்க முடியாது.
பெர்லீனில் அன்றாட வேலை, மற்றும் தேவைகளுக்காக மிதிவண்டியை உழக்குகிறவர்களின் தொகை 25 விகிதத்துக்கும் அதிகமாகியிருப்பது ஒரு பக்கம் சுற்றுப்புற சூழலைப் புன்னகைக்க வைக்கும் விளைவுதான்.
அதன் பக்கவிளைவுகளோ வேதனைக்குரியவை. நகர வீதிகளில் மிதிவண்டியாளர்களால் ஏற்படுத்தப்படும் விபத்துக்களின் எண்ணிக்கை திரிபடைந்த கொரோனாக்கிருமித் தாக்கம் போன்று வேகமாக அதிகரித்து வருகிறது. அவைகளில் 50 விகிதமானவைகள் மிதிவண்டிகளை ஓட்டுகிறவர்களால் உருவாக்கப்பட்டவையே. 2020 இல் மிதிவண்டி விபத்துக்களில் இறந்தவர்கள் தொகை 17 அது 2019 ம் ஆண்டைவிட 11 பேர் அதிகமானது. பாதசாரிகளிடமிருந்து மிதிவண்டியாளர்கள் பற்றி வரும் முறையீடுகளிலும் பெரும் அதிகரிப்பைக் காணமுடிகிறது.
சுமார் 1.2 மில்லியன் தனியார் வாகனங்களைக் கொண்ட பெர்லினில் மிதிவண்டிகளின் எண்ணிக்கை மூன்று மில்லியனாக இருக்கிறது. அதனால் மிதிவண்டி உரிமையாளர்கள் தத்தம் வண்டிகளைப் பதிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தைப் பிரேரிக்கும் பொலீசார் அது ஒரு இடியப்பச்சிக்கலாகும் வாய்ப்பு உண்டு என்றும் அஞ்சுகிறார்கள். காரணம் மிதிவண்டிகளைப் பதிவு செய்ய ஆரம்பித்தால் அதிகாரப் பணித்துறையில் ஏற்படக்கூடிய நேரச்செலவு என்கிறார்கள்.
மிதிவண்டியாளர்கள் கட்டுப்பாடில்லாமல், கவனமின்றி நடக்கிறார்கள் என்று விமர்சிப்பது பற்றி மிதிவண்டியாளர்களின் சங்கமொன்று திருப்பிச் சாடுகிறது. பெர்லின் நகரின் போக்குவரத்தில் தனியார் வாகனங்கள் 33 விகிதமாக இருக்கிறது, ஆனால் அவைகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பொது இடமோ நகரின் 58 விகிதமாக இருக்கிறது. மிதிவண்டிப் போக்குவரத்து நகரின் 18 விகிதமானதாக இருக்கிறது, ஆனால் நகரில் அதற்காக வெறும் 3 விகிதப் பொது இடமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. நகரப் போக்குவரத்தில் மிதிவண்டியாளர்களுக்கான இடத்தை அதிகரிக்கவேண்டும், அதற்காக மாற்றப்படும் நகர அமைப்பில் திட்டங்கள் தெளிவாக்கப்படவேண்டுமென்று கோருகிறார்கள் மிதிவண்டியாளர்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்