சாப்பாட்டு அவாவை நிறுத்தவேண்டுமென்று நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது சீனா.
சீனாவில் சுபீட்சம் உண்டாகிவருவதன் மோசமான பக்கங்களிலொன்று நாட்டில் குப்பையாக்கப்படும் சாப்பாட்டின் அளவு அதிகமாகிவருவது என்பது ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் கவனத்திற்கு வந்து அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
உலக நாடுகளின் மொத்த வீட்டுக் கழிவுகளிலும் சுமார் 25 சதவீதம் சீன நகரங்களிலிருந்து வருபவையாகும். இந்த கழிவுகளில் பெரும்பாலானவை உணவைக் கொண்டுள்ளன. 2019 சீனாவின் ஏற்படுத்தப்பட்ட உணவுக் கழிவு 18 மில்லியன் தொன் ஆகும். இது ஒரு ஆண்டு முழுவதும் 30-50 மில்லியன் மக்களுக்கு உணவளிக்க போதுமானது.
சீனாவின் உணவுக் கழிவுகள் நாட்டின் தரிசு நிலப்பகுதிகளில் கொட்டப்படுகின்றன அல்லது எரிக்கப்படுகின்றன. இதுபோன்று எண்ணற்ற நிலப்பரப்புகள் கிட்டத்தட்ட நிரம்பியுள்ளதால், நகரங்கள் சமீபத்திய ஆண்டுகளில் பெரிய அளவிலான எரியூட்டிகளை நிர்மாணிப்பதில் முதலீடு செய்துள்ளன. எரிக்கப்படும் உணவுக் கழிவுகள் பெரும்பாலும் ஈரப்பதமாக இருப்பதால் அவை வெளியிடும் மீத்தேன் வாயுவின் அளவு மிக அதிகமானது. அது பூமியை வெப்பமாக்குவதில் முக்கியமான இடத்தை வகிக்கும் வாயுவாகும்.
மக்களிடையே கொள்வனவு செய்யும் சக்தி அதிகரித்திருப்பதனால் சீனர்கள் பலரும் உணவகங்களில் சாப்பிடும் வழக்கத்தை அதிகமாக்கிவருகிறார்கள். உணவுக்காகத் தனது விருந்தினர்களை அழைத்துச் செல்பவர் தனது பணபலத்தையும், விருந்தோம்பலையும் காட்டுவதற்காக ஏகப்பட்ட உணவை அவர்களுக்காகத் தருவிக்கிறார். தன்னால் அழைக்கப்பட்டவர்கள் சாப்பிடத் தேவையான அளவு மட்டும் தருவித்தால் தன்னைக் கஞ்சனாக எண்ணிவிடுவார்களோ என்பதாலும் உணவுப் பண்டங்களை அளவுக்கதிகமாகத் தருவிப்பது சாதாரணம்.
இன்னொரு பக்கத்தில் உணவகங்களும் தமது இலாபத்தைப் பெருக்கிக்கொள்வதற்காக ஒவ்வொரு தட்டு உணவையும் விலையை அதிகமாக்கி அளவையும் அதிகமாக்குகிறது. அதீதமான அளவில் உணவுத்தட்டுகளைக் காட்டி வாடிக்கையாளர்களைக் கவர்வது உணவகங்களிடையே வழக்கமாகிவிட்டது.
சீனாவின் பாடசாலைகளும் உணவைக் குப்பையாக்கும் பிரச்சினையில் கணிசமான பங்களிக்கின்றன. ஒரு சீன ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, நாட்டின் பெரிய நகரங்களில் உள்ள மாணவர்கள் அவர்களுக்குப் பரிமாறப்படும் உணவில் சராசரியாக மூன்றில் இரண்டு பங்கு மதிய உணவை மட்டுமே சாப்பிடுகிறார்கள்.
இப்படியான நடவடிக்கைகளின் விளைவாக ஒவ்வொரு முறையும் சாப்பிட்டவர்கள் மேசையிலிருந்து விலகும்போது ஏகப்பட்ட உணவு மீதமாகக் கிடக்க அவை குப்பையில் கொட்டப்படுகின்றன. வீணாக உணவைக் குப்பையாக்கும் நடத்தையில் சீனாவில் மோசமான பகுதியாக ஹொங்கொங் குறிப்பிடப்படுகிறது. சீனாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான நகரான ஷாங்காயில் மட்டுமே ஒவ்வொரு நாளும் 2,000 தொன் உணவுக் கழிவுகள் உருவாகின்றன. அவற்றில் சுமார் 30 சதவீதம் கழிவுகள் காய்கறிகளையும், கிட்டத்தட்ட 20 சதவீதம் இறைச்சியையும் கொண்டுள்ளன.
அரச திணைக்களங்களில் வேலைசெய்பவர்கள் அதிகமாக உணவைத் தருவித்தால் தண்டம், உணவங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி முக்கியஸ்தர்கள் அடிக்கடி சென்று அளவுக்கதிகமாக உணவு தருவிப்பவர்களுக்குத் தண்டம் விதித்தல், பெருந்தீனியைத் தட்டுகளில் போட்டு விளம்பரம் செய்யும் உணவகங்களுக்குத் தண்டம் விதித்தல், பெருந்தீனி தின்பதை டிக்டொக் போன்ற தளங்களில் பிரசுரிப்பவர்களுக்குத் தண்டம் போன்றவைகளைச் சீனா அமுலுக்குக் கொண்டுவர ஆரம்பித்திருக்கிறது.
கடந்த வருடத்தில் இப்படியான பெருந்தீனி சாப்பிடும் வீடியோக்களை Douyin தளத்தில் பரப்பியவர்களின்எண்ணிக்கை சுமார் 120,000 என்று குறிப்பிடப்படுகிறது. இப்படியானவர்களுக்கு சுமார் 12,500 எவ்ரோ பெறுமதியான தண்டம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.
உணவகங்களில், உணவுகளை விற்கும் இடங்களிலும் “அளவாக வாங்கு”, “உனது சாப்பாட்டுத் தட்டை நிறைவு செய்”, “உணவை வீணாக்காதே” போன்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சாள்ஸ் ஜெ.போமன்