பிரான்ஸ் அரசின் காலநிலை பேணும் நடவடிக்கைகள் போதுமானதா என்பது பற்றி அரசின் மீதான வழக்கு விசாரணை.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸில் எரி நெய்விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பமாகிய அதேசமயம் அதிக சத்தமில்லாமல் ஆரம்பமாகிய இன்னொரு போராட்டம் சுற்றுப்புற சூழல் பேணல் பற்றிய விழிப்புணர்வால் ஆனது. அதன் விளைவாக காலநிலை மாற்றங்களை எதிர்நோக்க வேண்டிய நடவடிக்கைகளுக்காகப் போராடும் நான்கு அமைப்புக்கள் பிரெஞ்ச் அரசின் மீது வழக்குப் போட்டிருக்கின்றன.
அந்த வழக்கின் நோக்கம் பிரெஞ்ச் அரசை தற்போதையதை விடக் கடுமையான சட்டங்களை உண்டாக்கி சுற்றுப்புற சூழலைப் பேணக்கூடிய மேலும் திறம்பட்ட அரசியலை நடத்துவதேயாகும். பெயர் விபரங்களுடன் சுமார் இரண்டு மில்லியன் பேரின் ஆதரவைத் திரட்டிய இந்த இயக்கத்தின் ( La marche du siècle) நோக்கம் பிரான்ஸில் அதே சமயத்தில் எரிநெய் வரியுயர்வையெதிர்த்துப் போராடிய “மஞ்சள் சட்டையினரின்” போராட்டத்துக்கு எதிரானதாகும். அதாவது இந்த இயக்கத்தினர் அரசாங்கம் தானே பிரகடனம் செய்த காலநிலை பேணும் குறிக்கோளை அடைய வேண்டிய நடவடிக்கைகளை எடுக்காமலிருப்பதை எதிர்த்துப் போராட்டம் நடாத்தினார்கள்.
அதே வருடத்தில் [2019] நெதர்லாந்தின் காலநிலை பேணும் அமைப்புக்கள் தமது அரசை நீதிமன்றத்துக்கு இழுத்ததன் மூலம் அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் அரசு ஐ.நா-வின் கோட்பாட்டுக்கு இணங்கி 2020 இல் நாட்டின் நச்சு வாயு வெளியேற்றலை 25 விகிதத்தால் குறைப்பதாகக் கொடுத்த உறுதியை நிறைவேற்றவேண்டுமென்று கட்டளையிட்டிருக்கிறது. அந்தத் தீர்ப்பின்படி நெதர்லாந்து அரசு திட்டமிட்டிருந்த 20 விகித நச்சுவாயு வெளியேற்றக் குறைப்பைவிட அதிகமாக அரசு குறைக்கவேண்டுமென்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
அதைத் தவிர சுவீடனைச் சேர்ந்த சிறுமி கிரேத்தா தூன்பெரி உலகெங்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தித் தத்தம் அரசுகள் காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்று நடத்திய போராட்டமும் பிரான்ஸில் பிரபலமாகியிருந்தது. பிரான்ஸ் அரசின் மீது போடப்பட்ட வழக்கின் தீர்ப்பு வர நீண்டகாலமாகலாம். ஆனாலும், இது போன்ற வழக்குகள் மேலும் பலருக்குச் சுற்றுப்புற சூழலைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்