இந்தோனேசியா வயது குறைந்தவர்களுக்குத் தடுப்பூசி போடுவதில் ஆரம்பிக்கிறது.
உலகின் பல நாடுகளிலும் தத்தம் குடிமக்களுக்குக் கொவிட் 19 தடுப்பூசிகளைப் போட ஆரம்பித்திருக்கிறார்கள். வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு தடுப்பு மருந்துகளை வெவ்வேறு தயாரிப்பாளர்களிலிருந்து தருவிக்கிறார்கள். எல்லோரையும் விட வித்தியாசமாக இந்தோனேசிய அரசு 18 – 29 வயதுக்காரர்களுக்கு தடுப்பூசியை முதலில் போடுகிறது.
இந்தோனேசியாவின் 59 வயதான ஜனாதிபதி வுடூடு முதலாவதாகத் தடுப்பு மருந்தைப் பெற்றவர்களில் ஒருவர். ஆனால், உப ஜனாதிபதி மாருப் அமீன் 77 வயதானவரென்பதால் அவருக்கு இப்போது தடுப்பு மருந்து கிடைக்காது. மருத்துவ சேவையாளர்கள், நகரகாவலர்கள், ஆசிரியர்கள், இராணுவத்தினர் குறிப்பிட்ட சில அரசாங்க ஊழியர்களும் முதல் கட்டத்திலேயே தடுப்பூசி கொடுக்கப்படுகிறது.
இந்தோனேசிய அரசுக்குத் தொற்றுநோய்ப் பரவல் தடுப்பு விடயங்களில் ஆலோசனை கொடுக்கும் அமீன் சோபண்டிரியோ “இளவயதினர் வேலைக்காகவும் வெவ்வேறு காரணங்களுக்காகவும் எப்போதும் வீட்டுக்குள்ளும், வெளியுலகிலும் திரிபவர்கள். அவர்கள் தான் கிருமிகளைக் காவித்திரிவதில் முக்கியமானவர்கள். எனவே, அவர்களுக்கு முதலில் தடுப்பூசி கொடுப்பதே தர்க்கரீதியாகச் சரியானது,” என்கிறார்.
கூட்டுக்குடும்பங்கள் அதிகமானதால் பெரும்பாலான முதியவர்களும் இந்தோனேசியாவில் இளையவர்களுடனேயே வசிக்கிறார்கள். அவர்களைப் பிரித்து வேறு இடங்களில் வாழவைப்பது முடியாத காரியம். 270 மில்லியன் மக்களுள்ள இந்தோனேசியாவில் கொவிட் 19 படு வேகமாகப் பரவிவருகிறது, உயிர்களைக் குடிக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்