பூகம்பத்தால் தாக்கப்பட்ட இந்தோனேசியாவின் சுலவேசி தீவு.
வெள்ளியன்று நடு நிசி இந்தோனேசிய நேரம் சுமார் 02.18 அளவில் சுலவேசி தீவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் ஆங்காங்கே பல கட்டடங்கள் இடிந்து சில இறப்புகள் ஏற்பட்டிருப்பதுதன் பலர் இடிபாடுகளுக்கிடையே மாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
தீவின் மேற்குப் பிராந்தியத்திலிருக்கும் மமுஜு என்ற சுமார் 110,000 மக்கள் தொகையுள்ள நகரொன்றின் மருத்துவ நிலையம் முழுதாக இடிந்து வீழ்ந்தது. நகரின் இயற்கைச் சேதங்களில் காப்பாற்றும் படையினர் அந்த மருத்துவ மனையின் இடிபாடுகளுக்குக் கீழே மாட்டிக்கொண்ட நோயாளிகள், தொழிலாளிகள் ஆகியோரைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஏழு இறப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகவும் எட்டுப் பேருள்ள ஒரு குடும்பம் அந்தக் கட்டடத்தின் கீழே மாட்டிக்கொண்டிருப்பதும் தெரியவருகிறது. 24 பேர் காயமடைந்திருப்பதாகவும் இறப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் குறிப்பிடப்படுகிறது.
இந்தோனேசியாவின் நிலமட்டத்தின் கீழே புவியின் தட்டுக்கள் சில ஒன்று சேர்ந்திருக்கின்றன. அவைகளில் அவ்வப்போது நகர்வுகள் ஏற்படுவதும் அதனால் பூமியதிர்ச்சிகள் ஏற்படுவதும் அடிக்கடி நடப்பவையே. சுலவேசி நகரை 2018 இல் தாக்கிய சுனாமி அலை சுமார் 4,300 பேரின் உயிர்களை எடுத்தது, அல்லது காணாமல் போகச் செய்தது. அந்தச் சுனாமியின் காரணம் கடல் மட்டத்துக்குக் கீழே ஏற்பட்ட ஒரு பலமான பூமியதிர்ச்சியே ஆகும். அதே போன்று 2004 இல் சுமாத்திரா கடற்கரையை ஒட்டி ஏற்பட்ட பூமியதிர்ச்சியால் உண்டாகிய சுனாமி அலை அப்பிராந்தியத்தில் 220,000 பேரைக் கொண்றழித்தது.
சாள்ஸ் ஜெ. போமன்