பாதுகாப்புக் காரணத்துக்காக ஜோ பைடனின் பதவியேற்பு ஒத்திகை பின்போடப்பட்டது.

வரவிருக்கும் நாட்களில் வாஷிங்டனிலும், அமெரிக்காவின் மற்றைய நகரங்கள் சிலவற்றிலும் மீண்டும் கலவரக்காரர்கள் பேரணிகள் நடத்தவிருப்பதாக அறிந்துகொண்டதாக அமெரிக்காவின் தேசிய உளவுப்படையினர் தெரிவிக்கின்றனர். அதனால் நாடெங்கும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

வழக்கமாக அமெரிக்க ஜனாதிபதி புதியதாகப் பதவியேற்கும் வைபவம் பல்லாயிரக்கணக்காணவர்கள் பங்கெடுக்கும் விழாவாகக் கொண்டாடப்படும். இவ்வருடம் கொரோனாப் பரவல்களால் அவை கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டுச் சிறியதாகச் சம்பிரதாயத்துக்காக நடாத்தப்படவிருந்தது. அதற்கான ஒத்திகை ஞாயிறன்று வாஷிங்டனில் நடக்கவிருந்ததை ஒத்திப்போட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.

ஜோ பைடனின் பாதுகாப்பைக் கருதி அவரது பிரயாணங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. தனது திட்டங்களை மாற்றி அவர் திங்களன்றுதான் ரயிலில் வாஷிங்டனுக்குப் பயணமாவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஜனவரி 06 ம் திகதி டிரம்ப்பின் பேரணியைத் தொடர்ந்து பாராளுமன்றக் கட்டடத்தில் அத்துமீறிப் புகுந்தவர்களில் சுமார் 200 பேரை அடையாளங்கண்டிருப்பதாகவும் அவர்களில் 100 பேரைக் கைது செய்துவிட்டதாகவும் அமெரிக்காவின் பொலீஸ் தெரிவிக்கிறது. பாராளுமன்றக் கட்டடத்துக்குள் வன்முறையில் இறங்கியவர்கள் சில பாராளுமன்ற உறுப்பினர்களைக் கடத்திச் செல்லவும், கொலை செய்யவும் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்க அரச வழக்குரைஞர் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.வெள்ளை நிறவாதத் தீவிரவாதிகள் பத்து பேராவது அதே நாளில் தலை நகரில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டு அவர்கள் மீதும் வலை வீசப்பட்டுள்ளது.

https://vetrinadai.com/news/impeachment-trump/

தேசிய அதிரடிப்படையினரைச் சேர்ந்த 21,000 பேரை வாஷிங்டனில் இணைத்துப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒத்திப் போடப்பட்ட ஒத்திகை பார்த்தல் திங்களன்று நடைபெறும். பதவியேற்கும் சமயத்தில் மட்டுமன்றித் தொடர்ந்து வரும் காலங்களிலும் தீவிரவாதச் செயல்களுக்கான ஆபத்தும் பைடன் தாக்கப்படக்கூடிய ஆபத்தும் அதிகரித்திருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *