பிறேசில் வைரஸ் அச்சம்:எல்லா வழிகளையும்அடைக்கிறது பிரிட்டன்!
பிரித்தானியா அதன் தரை, ஆகாய, கடல் வழிகள் அனைத்தையும் திங்கள் காலைமுதல் அடைக்கவுள்ளது. ஏதேனும் காரணத்துக்காக உள்ளே பிரவேசிக்கும் அனைவரும் 72 மணித்தியாலத்தினுள் செய்யப்பட்ட வைரஸ் பரிசோதனை நெக்கடீவ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
பத்துநாட்கள் வரையான தனிமைப்படுத்தலுக்கும் இணங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படு கின்றது.விதிகளை மீறுவோர் அபராதங்களையும் எதிர்கொள்ள நேரிடும். விதிவிலக்கு பிரான்ஸிலிருந்து கலே – டோவர் மூலமாக பிரிட்டனுக்கு அவசியமான உணவுப்பொருட்களைக் கொண்டுவரும் பாரவண்டிச் சாரதிகளுக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நாடு உள்நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸின் படுவேகமான பரவலில் சிக்கித் தடுமாறிவருகின்றது. இந் நிலையில் பிறேசில் வைரஸ் போன்ற வெளிநாட்டுத் தொற்றுகளும் உள்ளே பரவிவிட வாய்ப்புள்ளதால் நாட்டின் வெளித் தொடர்புகளைக் கடுமையான முறையில் இறுக்கி மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திங்கள் முதல் அமுலுக்கு வருகின்ற போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் பெப்ரவரி 15 வரை நடைமுறையில் இருக்கும் என்று பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தனது டவுனிங் வீதி (Downing Street) வாசஸ்தலத்தில் இன்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அறிவித்தார்.
பிறேசிலில் அமசோன் மாகாணத்தில் தோன்றியுள்ள சந்தேகத்துக்குரிய புதிய வைரஸ் கிருமி பற்றிய அச்சம் காரணமாக சகல தென் அமெரிக்க நாடுகளுடனான போக்குவரத்துகளையும் பிரிட்டன் இன்று வெள்ளிக்கிழமை முதல் இடை நிறுத்தி உள்ளது.
உலகம் கொரோனா வைரஸின் முதலாவது நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முன்னரே அதன் மாற்றமடைந்த புது அவதாரங்கள் உலகை அச்சுறுத்தத் தொடங்கி உள்ளன.உரு மாறிய வைரஸின் பரவல் பற்றி அவசரமாக ஆராய்வதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகாலக் கூட்டம் குறித்த நாளுக்கு 15 தினங்கள் முன்பாகக் கூட்டப்பட்டுள்ளது.
—குமாரதாஸன். பாரிஸ்.