அனுதாபம் சம்பாதிக்க ஏமாற்று வேலையில் ஈடுபட்ட முன்னாள் நீதியமைச்சரின் மனைவிக்குச் சிறை.
நோர்வேயின் அரசியல் சரித்திரத்தில் அனுதாபம் சம்பாதிக்கும் வித்தியாசமான கேவலத்தைச் செய்து அகப்பட்டுக்கொண்ட நீதியமைச்சர் தூர் மிக்கேல் வாராவின் மனைவி லைலா பெர்த்துஸன் நீதிக்கு முன்னால் நிறுத்தப்பட்டு 20 மாதங்கள் சிறைத்தண்டனையால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்.
நீதியமைச்சராக இருப்பதால் தனது கணவர் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள், தங்கள் குடும்பத்துக்கும் பாதுகாப்பு இல்லை என்று சோடித்துக் காட்டுவதற்காக அனிதா தனது வாகனத்தை உடைத்துத் தீவைத்ததுடன், வீட்டுக்குள்ளிருக்கும் தளபாடங்களையெல்லாம் உடைத்து வீட்டுக்குள்ளும் யாரோ புகுந்து நாசமாக்கிவிட்டார்கள் என்று பொலீசில் புகார் கொடுத்தார்.
நடந்தவைகளை விசாரிக்க ஆரம்பித்த பொலீசார் விரைவிலேயே நடந்தவைகளெல்லாம் திட்டமிட்டுச் செய்யப்பட்ட நாடகமென்பதைப் புரிந்துகொண்டு வெளிப்படுத்தவே கணவர் பதவியிலிருந்து விடுமுறை பெற்றுக்கொண்டார். லைலா கைதுசெய்யப்பட்டார். தொடர்ந்து நடந்த விசாரணைகளில் கணவரின் கட்சியைச் சேர்ந்த வேறு இரண்டு அமைச்சர்களுக்குப் பத்திரிகைகளிலிருந்து எழுத்துக்களை வெட்டி ஒட்டி மிரட்டல் கடிதங்கள் அனுப்பிவைத்தாரென்பதும் தெரியவந்தது. எல்லாக் குற்றச்சாட்டுகளாலும் எழுந்த விமர்சனத்தைத் தாங்கமுடியாமல் கணவர் தூர் மிக்கேல் பதவியிலிருந்து விலகினார். லைலா மீது நீதிமன்றத்தில் வழக்கு ஆரம்பமாகியது.
2019 ம் ஆண்டின் ஆரம்பத்தில் நடந்த இச்சம்பவங்களுக்காகத் தற்போது லைலாவுக்கு நீதிமன்றம் 20 மாதங்கள் சிறைத்தண்டனை கொடுத்திருக்கிறது. அவரது நடவடிக்கைகள் ஜனநாயகத்துக்குப் பாதகமானவை என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்