நெதர்லாந்தில் வெளியாகும் கரியமிலவாயுவை நோர்வேயில் கடலுக்குக் கீழே புதைக்கும் திட்டம் தயார்!

நோர்வேயின் நிறுவனமான Northern Lights கடற்பரப்பின் அடித்தளத்தின் கீழே கரியமிலவாயுவைப் பாவிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து அது செயற்படும் என்றும் நிரூபித்திருக்கிறது. அதைப் பாவித்து நெதர்லாந்தில் தமது தொழிற்சாலையில் வெளியாகும் கரியமிலவாயுவை வளிமண்டலத்தில் விடுவதற்குப் பதிலாக நிலத்துக்குக்கீழே புதைக்கும் ஒப்பந்தம் ஒன்று செய்திருக்கிறது யாரா [Yara] நிறுவனம். 

யாரா நிறுவனம் வெளியிடும் கரியமிலவாயுவின் அளவு வருடத்துக்கு 800,000 தொன் ஆகும். ஐரோப்பாவில் கரியமிலவாவாயு ஒரு தொன்னை வெளியிட அறவிடப்படும் கட்டணம் தற்போது 90 எவ்ரோ ஆகும். ஐரோப்பிய ஒன்றியம் பேணிவரும் கரியமிலவாயு வெளியேற்றச் சந்தையில் வருடாவருடம் குறிப்பிட்ட அளவு கரியமிலவாயு வெளியேற்றலுக்கான பங்குகள் விற்கப்படுகின்றன. அந்தப் பங்குகளுக்கான சந்தையில் அவைகளின் விலை வாங்குகிறவர்களுக்கும் விற்பவர்களுக்குமிடையே பேரம் பேசப்பட்டு விற்பனையாகின்றன. அப்பங்குகளின் மொத்த அளவு வரையறுக்கப்பட்டிருப்பதால் அதிகமான கரியமிலவாயுவை வளிமண்டலத்துக்குள் விடும் நிறுவனங்கள் சந்தையில் விற்கப்படும் விலையைச் செலுத்தவேண்டியிருப்பதால் அவர்களின் செலவு அதிகமாகிறது. சமீப காலத்தில் அவற்றின் விலை மிக அளவில் உயர்ந்திருப்பதால் பெருமளவில் கரியமிலவாயுவை வெளியேற்றும் நிறுவனங்கள் அதை நிலத்தின் கீழ் புதைப்பதன் மூலம் இலாபமடையக்கூடியதாக இருக்கிறது.

உரம் தயாரிக்கும் யாரா நிறுவனம் 2025 ம் ஆண்டு முதல் நோர்வேயில் தனது கரியமிலவாயுவை நீர்ப்பரப்பின் மட்டத்தின் கீழே புதைக்கும். Equinor, Total,  Shell ஆகிய நிறுவனங்களால் நிறுவப்பட்டது நோதர்ன் லைட்ஸ். நோர்வே அரசின் மானியத்தைப் பெருமளவில் பெற்று ஆரம்பிக்கப்பட்ட அந்த நிறுவனத்தின் தொழில்நுட்பமானது உலகின் காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு மிகவும் அவசியமானது என்று அதுபற்றிய முடிவுகளை எடுத்த பாரிஸ் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *