இரவு ஊரடங்கை எதிர்த்து நெதர்லாந்து நகரங்களில் வன்செயல்கள் வெடிப்பு!

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை எதிர்த்து நெதர்லாந்தில் வன்செயல்கள் வெடித்துள்ளன.பல நகரங்களில் இளைஞர்களுக்கும் கலகம் அடங்கும் படையினருக்கும் இடையே மூன்றாவது நாளாக திங்கள் இரவும் மோதல்கள் இடம் பெற்றுள்ளன.கார்கள், சைக்கிள்கள் தீக்கிரையாகின. கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. நூற்றுக் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதிய வைரஸ் பரவலை அடுத்து மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நெதர்லாந்து அரசு இரவு ஒன்பது மணி முதல் அதிகாலை 04-30 வரை ஊரடங்குக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தி உள்ளது.

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிறிய அளவில் தொடங்கிய ஆர்ப்பாட்டங்களே பெரும் வன்முறையாக மாறி உள்ளன.துறைமுக நகரமான ரொட்டடாமில் (Rotterdam) ஞாயிறன்று நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது இளைஞர் குழுக்கள் பொலீஸார் மீது பட்டாசுகளையும் கற்களையும் வீசித் தாக்கினர். கடைகள், வாகனங்களையும் சேதப்படுத்தினர் என்று கூறப்படுகிறது.

நிலைமை கட்டுமீறியதால் நகர நிர்வாகம் கலகம் அடக்கும் பொலீஸாரை வரவழைத்ததை அடுத்துப் புதிதாக மோதல்கள் வெடித்தன. ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறிப் பல இடங்களுக்கும் பரவி உள்ளன.படையினர் தண்ணீர் பீரங்கிகள், கண்ணீர்ப் புகை கொண்டு கலகக்காரர்களைக்கட்டுப்படுத்தி வருகின்றனர்தலைநகர் அம்ஸ்ரடாம் (Amsterdam) உட்பட Alphen, The Hague, Den Bosch, Amersfoort, Helmond ஆகிய நகரங்களிலும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அம்ஸ்ரடாமில் நாய்கள், குதிரைகள் சகிதம் கலகம் அடக்கும் பொலீஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டினர். நெதர்லாந்தின் இடைக்கால அரசின் பிரதமரான மார்க் ருட் (Mark Rutte) இந்த வன்முறைகளைக் கொடூரமான குற்றச் செயல்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கொரோனா வைரஸ் நெருக்கடி ஆரம்பித்த பின்னர் இரவு ஊரடங்கு உட்பட கண்டிப்பான சுகாதாரக் கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு இப்போதுதான் முதல் முறையாக அமுல் செய்துள்ளது. இரவு ஊரடங்கு விதிகளை மீறுவோர் 95 ஈரோக்கள் அபராதம் செலுத்த நேரிடும்.நெதர்லாந்தின் இதுவரை 962,000 தொற்றுக்கள் உறுதி செய்யப் பட்டுள்ளன. 13,646 மரணங்கள் பதிவாகி உள்ளன.

(படங்கள் :Algemeen Dagblad பத்திரிகை)

–குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *