வுஹான் ஆய்வுகூடப் பணியாளரே முதல் தொற்றுக்கு இலக்காகினர்? – அமெரிக்கா உளவுத் தகவல்
‘சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்குவதற்கு முன்பாக அங்குள்ள வுஹான் (Wuhan) நகரில் இயங்கும் சர்ச்சைக்குரிய வைரஸ் நுண்கிருமி ஆய்வு கூடத்தின் பணியாளர்கள் சிலர் கடந்த, 2019 ஆம் ஆண்டு இலையுதிர் காலப்பகுதியில் தொற்று நோய் அறிகுறிகளுக்கு உள்ளாகினர் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
” சிவில் தேவைகளுக்கான ஆய்வுகளை நடத்துகின்ற அந்த சோதனைக்கூடத்தில் சீன இராணுவத்துடன் தொடர்புடைய பரிசோதனைகளும் மிக ரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. ‘தனது உளவுப் பிரிவை ஆதாரம் காட்டி அமெரிக்க ராஜாங்க அமைச்சு ஓர் அறிக்கையில் இத்தகவல்களை வெளியிட்டிருக்கிறது.
ஓரிரு தினங்களில் பதவி விலக இருக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் ராஜாங்க அமைச்சர் மைக் பொம்பியோ வைரஸ் விவகாரத்தில் சீனா மீது தொடர்ச்சியாக நடத்துவந்த தாக்குதல்களின் இறுதியாகஇந்த அறிக்கை வெளிவந்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர்கள் சீனாவில் தங்கியிருந்து தங்கள் விசாரணைகளை ஆரம்பித் திருக்கின்ற வேளையில் வுஹான் ஆய்வு கூடத்துடன் தொடர்புடைய இந்த செய்திகள் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
உலகில் இதுவரை இரண்டு மில்லியன் பேரை கொன்றுள்ள கொரோனா வைரஸ் முதலில் சீனாவின் வுஹான் நகர விலங்கு இறைச்சிச் சந்தை ஒன்றில் இருந்து காட்டு விலங்குகள் ஊடாக மனிதனுக்குப் பரவியது என்றும் இல்லை அது அங்குள்ள ஆய்வகத்தில்(Wuhan Institute of Virology – WIV) இருந்துதான் வெளியே கசிந்தது என்றும் இரண்டு விதமான சந்தேகங்கள் நீடித்து வருகின்றன.
வைரஸ் முதலில் எங்கிருந்து, எப்படி மனிதரில் பரவியது என்பது தொடர்பாக விசாரித்து அறிக்கை தயாரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு ஒன்றை நீண்ட இழுபறிக்குப் பிறகு நாட்டுக்குள் அனுமதித்திருக்கிறது சீனா.பத்து சர்வதேச நிபுணர்கள் அடங்கிய அக் குழுவினர் அங்கு விசாரணைகளை தொடக்கி உள்ளனர்.
இதேவேளை -குகை ஒன்றில் கொரோனா வைரஸ் மாதிரிகளைச் சேகரிக்கும் சமயத்தில் வுஹான் ஆய்வுக்கூட விஞ்ஞானிகள் உயிருள்ள வௌவால்களை போதிய பாதுகாப்பு இன்றிக் கையாள்வதைக் காட்டும் வீடியோ ஒன்றும் வெளியாகி இருக்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் வெளவாலின் கூரிய பல்லு பிளாஸ்டிக் கையுறை ஊடாகத் தனது கையில் ஊசி போலக் குத்தியது என்று விஞ்ஞானி ஒருவர் கூறுகின்றார்.மற்றொரு விஞ்ஞானி தனது வெறுங்கையில் வௌவால் ஒன்றைப் பற்றி வைத்திருக்கின்ற காட்சியும் அதில் இடம்பெற்றுள்ளது.உலகில் பரவுவதற்கு முன்பாகவே வுஹான் ஆய்வக விஞ்ஞானிகள் வைரஸ் தொற்றுகளுக்கு ஆளாகி இருக்கலாம் என்பதை அந்த வீடியோ உறுதிப்படுத்துவதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
உலகைப் புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலுக்கு யார் மீது பொறுப்புச் சுமத்துவது என்ற ‘பூகோள சண்டையில்’ மீண்டும் வுஹான் நுண் கிருமி ஆய்வுக்கூடம் சிக்கியிருப்பதை இந்த செய்திகள் காட்டுகின்றன.(படம் :வுஹான் வைரஸ் ஆய்வுகூடம்)
குமாரதாஸன். பாரிஸ்.