வாஷிங்டனில் முற்றுக்கையிட்டிருக்கும் படையினருக்கு உணவளிக்கும் உள்ளூர் பிரபல பிட்ஸா கடை.

ஜனவரி 20 ம் திகதி புதனன்று அமெரிக்காவின் தலைநகரில் நடந்தேறவிருக்கிறது புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்ச்சி. வழக்கத்துக்கு மாறாக நிகழ்ச்சியைச் சுற்றிவர உள்ள நாட்களில் நகரில் பாதுகாப்பை நிலை நாட்ட அங்கே வந்திருக்கும் ஆயிரக்கணக்கான இராணுவ, அதிரடிப்படை, பாதுகாப்புப் படையினருக்கு உணவளிக்க ஒரு பிட்ஸா நிறுவனம் முன்வந்துள்ளது. 

சாதாரமாக அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்கும்போது வாஷிங்டனுக்குப் பல்லாயிரக்கணக்கான அமெரிக்க மக்கள் படையெடுப்பார்கள், அதன் கோலாகலத்தில் பங்குபற்றிக் கண்டு கழிக்க. கொரோனாக் கட்டுப்பாடுகளால் இவ்வருடம் பதவியேற்பு விழா நடப்புகள் முடிந்தளவு வெட்டிச் சிரைத்துச் குறுக்கப்பட்டுள்ளன. முடிந்தவரை பார்வையாளர்களைத் தொலைக்காட்சிகள் மூலம் காணும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

ஜனவரி 06 ம் திகதி வாஷிங்டனில் நடந்த கலவரங்களும், பாராளுமன்றக் கட்டடத்தினுள் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் செய்த அமளிதுமளிக்கும் பின்பு பதவியேற்பையொட்டிப் பாதுகாப்பைப் பலப்படுத்துவது முக்கிய குறியாகிவிட்டது. அதற்காக மாநிலத்தின் பாதுகாப்புப் படையினர், உபரி இராணுவ வீரர்கள், அதிரடிப் படையினர், உளவுப் படையினரெல்லாம் ஆயிரக்கணக்கில் வாஷிங்டனில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். 

தொடர்ந்து சில நாட்கள் அங்கே தங்கவேண்டிய நிலையிலுள்ள அவர்கள் நகரிலுள்ள வெவ்வேறு பெரிய மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். பல திசைகளிலிருந்தும் அவர்களுக்கு உதவ விரும்புகிறவர்களின் நன்கொடையை ஏற்க அவர்களுடைய கட்டுப்பாடுகள் இடம்கொடுக்காது.

ஆனால், உணவைப் பொறுத்தவரை மட்டும் மலிவு விலை, நன்கொடைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. வாஷிங்டனில் பிரபலமான வீ, த பிட்ஸா [We, The Pizza] நிறுவனம் அவர்களுக்கு உணவளிக்கிறது. இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த நிறுவனத்தை அழைத்து குறிப்பிட்ட எண்ணிக்கைக்குப் பணம் கொடுத்து இராணுவ வீரர்களுக்குப் பிட்ஸா கொடுக்கச் சொன்னதையடுத்து அந்த நிறுவனம் சாதாரணமானவர்களிடமும் நன்கொடையை அதே காரணத்துக்காக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தது. அவைகளின் மூலமாக நகரில் பாதுகாப்புக்கு வந்துள்ளவர்களுக்கு அந்தப் பிட்ஸா நிறுவனம் உணவளித்து வருவதாகத் தெரிவிக்கிறது.

பொலீஸ் மற்றும் அமெரிக்க உளவு அமைப்புக்களின் எச்சரிக்கையான நடவடிக்கைகளை அடுத்து வாஷிங்டனில் ஞாயிறன்று எவ்வித வன்முறைப் பேரணிகளும் நடக்கவில்லை என்று அறிவிக்கப்படுகிறது. நகரில் அமைதி நிலவுவதாகவும் வன்முறையாளர்கள் மீது எடுக்கப்பட்டு வரும் கடுமையான நடவடிக்கைகளை அடுத்து அவர்கள் புதிய நடவடிக்கைகளில் ஈடுபட முயலவில்லையென்றும் தெரியவருகிறது. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *