யேமன் போரில் ஒரே வாரத்தில் 150 பேர் கொல்லப்பட்டார்கள்.
யேமன் போரில் ஈடுபடும் வெவ்வேறு பகுதியினரிடையே 2018 ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட சுமுக ஒப்பந்தத்தின் பின்னர் உண்டான மிகவும் காட்டமான மோதலில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டார்கள். ஹொடெய்தா நகரருகில் நடந்த இம்மோதலில் சவூதி அரேபியா, எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் பின்பலத்துடன் ஸ்தாபிக்கப்பட்ட யேமன் அரச படைகளும், ஹுத்தி போராளிகளும் பங்குபற்றினார்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
கடந்த வாரத்தில் அமெரிக்க வெளிவிவகாக அமைச்சர் மைக் பொம்பியோ ஹூத்தி போராளிகளைத் தீவிரவாதிகளாகப் பிரகடனப்படுத்தியதன் பின்னர் ஏற்பட்ட பெரும் மோதல் இதுவாகும்.
செங்கடலின் அருகேயிருக்கும் ஹொடெய்தா நகரைத் தமது கைக்குள் வைத்திருக்கும் ஹூத்தி போராளிகள் நகரின் தெற்கே இருக்கும் அரச படைகளின் இராணுவ தளங்களைக் குறிவைத்துத் தாக்கியபோது இரு பகுதியாருக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டது.
ஹொடெய்தா ஒரு துறைமுக நகராகும். வட யேமனிலிருக்கும் மில்லியனுக்கு மேற்பட்ட அகதிகளுக்கான உதவிப்பொருட்கள் இந்தத் துறைமுகத்தினூடாகத்தான் கொண்டுவரப்படவேண்டும். 2018 இல் இதை அரச இராணுவம் கைப்பற்ற முயன்றபோது தாம் துறைமுகத்தை அழித்துவிடுவதாக ஹூத்திகள் அறிவித்தார்கள். அச்சமயத்தில் ஐ.நா குறிக்கிட்டு ஏற்படுத்திய சுமுக நிலை ஒப்பந்தத்தின்படி இதுவரை காலமும் இங்கே அமைதி நிலவி வந்தது.
டிரம்ப் அரசு தீவிரவாதிகளாக ஹூத்தி அமைப்பினரை அறிவித்ததாலேயே இப்பிராந்தியத்தில் மீண்டும் மோதல்கள் ஏற்படுகிறது என்று குறிப்பிடப்படுகிறது. வரவிருக்கும் ஜோ பைடனின் அரசு ஹூத்திகள் பற்றி அமெரிக்கப் பிரகடனத்தை மாற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்