டிரம்ப் பதவியேற்ற நிகழ்ச்சியை விட அதிகமானோர் பைடனின் பதவியேற்பைப் பார்த்தார்கள்.
ஜனவரி 20 திகதியன்று ஜோ பைடன் ஜனாதிபதியாகப் பதவியேற்ற நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி மூலம் பார்த்தவர்கள் தொகை வேறெந்த ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியையும் விட அதிகம். மொத்தமாக வெவ்வேறு தொலைத்தொடர்புகள் மூலமாகப் பார்த்தவர்கள் தொகை இன்னும் முழுவதுமாகக் கணிக்கப்படவில்லை.
நேரடியாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பதவியேற்பு வைபவத்தை வெவ்வேறு தொலைக்காட்சி நிலையங்கள் மூலம் பார்த்தவர்களின் தொகைகளை வைத்துக் கவனிக்கும்போது டிரம்ப் ஆதரவாளர்களைப் பெரிதும் கவரும் Fox News தொலைக்காட்சியில் பதவியேற்பை இவ்வருடம் பார்த்தவர்கள் 2017 இல் டிரம்ப்பின் பதவியேற்பைப் பார்த்தவர்களில் 77% விகிதமானவர்கள் மட்டுமே. 2.74 மில்லியன் பேர் அத்தொலைக்காட்சியில் பைடன் பதவியேற்பைப் பார்த்தார்கள்.
MSNBC தொலைக்காட்சியில் 6.53 மில்லியன் பேர் பதவியேற்பு வைபவத்தைப் பார்த்தார்கள். அத்தொகை டிரம்ப் பதவியேற்பைப் பார்த்தவர்களை விட 338 விகிதம் அதிகமானதாகும். நிறுவனத்தின் 25 வருடச் சரித்திரத்தில் புதன்கிழமையன்று பகலில் தொலைக்காட்சி பார்த்தவர்களில் மிக அதிகமானதாக இருந்ததாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
ABC தொலைக்காட்சியில் பதவியேற்பைப் பார்த்தவர்கள் தொகை 2017 ஐ விட 10 விகிதத்தால் அதிகரித்து 7.66 மில்லியனாகவும், NBC இல் 6.89 மில்லியன் பேர் பார்த்தார்கள், அது 2017 பதவியேற்பை விடப் 12% ஆல் குறைந்திருக்கிறது. CBS தொலைக்காட்சியில் 13 விகிதத்தால் குறைந்து 6.07 மில்லியன் பேர் பார்த்திருந்தார்கள்.
இந்தத் தொலைக்காட்சிகளையெல்லாம் விடப் பிரபலமான CNN இல் பதவியேற்பு வைபவத்தைப் பார்க்கும் பார்வையாளர்கள் 196 விகிதத்தால் அதிகரித்துச் சுமார் 10 மில்லியன் பேரை ஈர்த்தது.
சாள்ஸ் ஜெ. போமன்