பிரான்ஸில் பொதுமுடக்கம் இனப்பெருக்கத்தை குறைத்திருக்கிறது.
சமீப வருடங்களில் இனப்பெருக்கம் குறைந்துவரும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முக்கியமான ஒன்று பிரான்ஸ். 2020 இல் கொரோனாப்பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான பொதுமுடக்கங்கள் அறிவிக்கப்பட்டவுடன் நாட்டின் இனப்பெருக்கம் அதிகரிக்கப்போகிறது என்று பரவலாக நம்பப்பட்டது. ஆனால், அது நிஜமாகவில்லை.
தம்பதியர்கள் வேலைக்குப் போகாமல் வீடுகளில் ஒன்றாக இருக்கும்போது அவர்களிடையே நெருக்கம் ஏற்படவும், கருத்தரிப்புக்கள் உண்டாகவும் சந்தர்ப்பம் அதிகரிக்கும் என்பது பொதுவான நம்பிக்கையாக இருந்தது. அது ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் நகைச்சுவையாகவும் குறிப்பிடப்பட்டது.
ஆரம்ப மாதத்தில் கருத்தரிப்பைப் பரீட்சித்துப் பாரிக்கும் உபகரணங்களின் எண்ணிக்கை 37% அதிகரித்திருந்ததாக அறிவிக்கப்பட்டது. அதே சமயம் கருத்தடைக்குப் பாவிக்கப்படும் உபகரணங்களின் தொகை 26 % விகிதத்தால் குறைந்ததாகவும் செய்திகள் வெளியிடப்பட்டது. அதன் விளைவாக 2020 பிரான்ஸில் பிள்ளைப்பிறப்புகள் கணிசமாக அதிகரித்த வருடமாகச் சரித்திரத்தில் குறிப்பிடப்படும் என்று நம்பப்பட்டது.
2021 பிறந்தபின் கடந்த வருடத்துக்கான கணக்குகளைப் பிரான்ஸ் அரசு வெளியிட்டபோதோ அதுபற்றிய ஏமாற்றம் தான் ஏற்பட்டிருக்கிறது. காரணம் இனப்பெருக்கம் 2 விகிதத்தால் குறைந்திருப்பதாகத் தெரிகிறது.
1930 இல் உண்டாகிய சர்வதேசப் பொருளாதார வீழ்ச்சி, 1970 களில் சளிக்காய்ச்சல் பரவலால் ஏற்பட்ட மக்கள் ஆரோக்கியம் பொதுவாக மோசமாகிய நிலைமை ஆகியவை மக்களால் வித்தியாசமாகவே பார்க்கப்பட்டது. பொதுமுடக்கங்களும் முதலில் எதிர்பார்ப்பு ஒரு மாதிரியாக இருப்பினும் நிஜத்தில் நிலைமை உணர்தல் வேறு விதமாகவே மனிதர்களால் அனுபவிக்கப்பட்டது. நெருக்கமாக இருந்தாலும் நிம்மதியின்மையும், மன உளர்ச்சியும் மக்களிடையே உருவானது. தமது எதிர்காலப் பொருளாதார நிலைமை பற்றிய எண்ணங்களில் எதிர்மறையான உணர்வுகளே மேலோங்கியிருந்தன, என்று காரணத்தை விளக்குகிறார்கள் சில மனோதத்துவ நிபுணர்கள். எனவே, தமது கணிப்பு இனப்பெருக்கம் குறையும் என்றே இருந்ததாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நிபுணர்களின் விளக்கத்தை நிஜமாக்குகின்றன பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளில் பொதுமுடக்கக் காலத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புக்கள். மக்களிடையே “உங்கள் பிள்ளை பெற்றுக்கொள்ளும் திட்டங்கள் பொது முடக்கத்தால் எப்படிப் பாதிக்கப்பட்டன?,” என்ற கேள்விக்கு பெரும்பாலானோர் தாம் தற்காலிகமாகத் தள்ளிவைத்துவிட்டதால அல்லது நிரந்தரமாகப் பிள்ளைப் பெறுதல் எண்ணத்தை நிறுத்திவிட்டதாகக் குறிப்பிடுகிறார்கள். பிரான்ஸைப் பொறுத்தவரை 50.7 % தாம் பிள்ளைப் பெறுதலைத் தள்ளிப் போட்டிருப்பதாகவும் 17.3 % நிரந்தரமாகவே நிறுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்