பிரான்ஸில் தஞ்சக் கோரிக்கைகடந்த ஆண்டில் பெருவீழ்ச்சி!
கொரோனா பெருநோய்த் தொற்றுக் காரணமாக பிரான்ஸில் அரசியல் புகலிடம் கோருவோரது எண்ணிக்கை கடந்த வருடம் 41 வீதத்தால் குறைந் துள்ளது என்ற தகவலை உள்துறை அமைச்சு வெளியிட்டிருக்கிறது.
கடந்த பல ஆண்டுகளில் ஏற்பட்ட அதி கூடிய வீழ்ச்சி இதுவாகும்.2020 இல் 81,669 புகலிட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.அதற்கு முதல் ஆண்டில் (2019)அந்த எண்ணிக்கை 138,420 ஆகும்.கொரோனா நெருக்கடி காரணமாக எல்லைகள் மூடப்பட்டமை, குடியேற்ற வாசிகளது பயணங்கள் தடைப்பட்டமை, கோரிக்கைகளைச் சமர்ப்பிக்க முடியாத பொது முடக்க சூழ்நிலைகள் இவை போன்ற காரணங்களால் ஐரோப்பிய ரீதியில் தஞ்சம் கோருவோர் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டுள்ளது.
ஜேர்மனியில் அகதி விண்ணப்பங்கள் 30 வீதத்தால் குறைந்துள்ளது. இதேவேளை, பிரான்ஸில் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டோரது எண்ணிக் கையும் கடந்த ஆண்டு சரி அரைவாசி யாகக் குறைந்துள்ளது.வெளிநாட்டவர்களுக்கு வருகை வீஸாக்கள் வழங்குவதும் மிகப் பெரும் வீழ்ச்சியாக 80 வீதம் குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன உல்லாசப் பயணிகளது வருகை தடைப்பட்டதே இதற்கு முக்கிய காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குமாரதாஸன். பாரிஸ்.