போர்த்துக்கள் மக்கள் ஞாயிறன்று [24.01]ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வாக்குச் சாவடிக்குப் போகிறார்கள்.
பெரும்பாலான போர்த்துக்கீசர்கள் தேர்தலை பின் போட விரும்புகிறார்கள். கொரோனாத் தொற்றுக்கள் பரவிவரும் சமயத்தில் தேர்தலை நடத்தக்கூடாதென்று தொற்று நோய்ப் பரவலைத் தடுக்கும் அதிகாரிகள் வேண்டிக்கொண்டாலும் அதற்காக அரசியல் சட்டத்தை மாற்றவேண்டிய நிர்ப்பந்தமிருப்பதால் தேர்தல் திட்டமிட்டது போல நடந்தேறும் என்றே தெரிகிறது.
சுமார் பத்து மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட போர்த்துகல் முதலாவது கொரோனாத் தொற்று அலையில் மற்றைய ஐரோப்பிய நாடுகளை விடக் குறைந்த இறப்புக்களை நேரிட்டது. ஆனால், பரவிக்கொண்டிருக்கும் தற்போதைய அலையில் கடந்த ஒரு வாரமாக சுமார் 200 க்கும் மேற்பட்டவர்கள் இறந்து வருகிறார்கள். 15,000 க்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு உள்ளாகிவருகிறார்கள்.
போர்த்துக்கலில் அவசரகாலச் சிகிச்சை நோயாளிகளுக்கான மொத்த இடங்களை மற்றைய ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடும்போது மிகக் குறைவான இடங்களே கொவிட் 19 நோயாளிகளுக்காகத் தயாராக இருக்கின்றன. 672 நோயாளிகளை மட்டுமே ஏற்றுக்கொள்ளக் கூடிய மருத்துவ சேவையில் ஏற்கனவே 627 இடங்களை கொவிட் 19 நோயாளிகள் எடுத்திருக்கிறார்களென்று சுமார் ஒரு வாரத்துக்கு முதலே எச்சரிக்கப்பட்டிருக்கிறது. எனவே நாட்டின் மருத்துவ சேவையின் இயக்கம் முழுவதுமாக கட்டுப்பாடிழந்துவிடும் நிலைமையை நோக்கிப் போவதாகக் குறிப்பிடப்படுகிறது.
மற்றைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைப் போலவே போர்த்துக்கலிலும் கொவிட் 19 தடுப்பூசி கொடுத்தல் டிசம்பர் மாதக் கடைசியில் ஆரம்பிக்கப்பட்டது. முதலில் மருத்துவ சேவையாளர்களுக்கு ஊசி செலுத்துதல் நடந்துகொண்டிருக்கிறது. தடுப்பூசி பெற்ற ஒரு மருத்துவர் புது வருடத்தன்று திடீரென்று இறந்துபோயிருப்பதைத் தவிர வேறெந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை.
போர்த்துகல் ஜனாதிபதியின் ஸ்தானம் நாட்டின் அரசியல் ஒரு சம்பிரதாயத்துக்கு உரியது மட்டுமே. மிகவும் குறைந்த விடயங்களில் அறுதிப் பெரும்பான்மை வாக்கை அளிக்கவும், நாட்டில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கிறது. தேர்தலில் தற்போது பதவியிலிருக்கும் மார்செலோ ரொபெலோ டி சூஸா தான் [Marcelo Rebelo de Sousa] மீண்டும் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு வாரத்துக்கும் மேலாகக் கடுமையான பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருப்பதால் பெரும்பாலான வாக்காளர்கள் வாக்களிக்கப் போவதில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 13,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் வீட்டு வாசலிலேயே அவர்களுடைய வாக்குகளைப் பெற்றுக்கொள்ள ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. 250,000 பேர் வாக்களிப்பு நாள் நெரிசலைத் தவிர்க்க முன்னராகவே வாக்களித்து விட்டார்கள். வாக்களிக்கப் போகிறவர்களைத் தவிர வேறெவரும் வெளியே போகத் தடை நிலவுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்