ஓமான் நாட்டின் குறிப்பிட்ட சில துறைகளில் வெளிநாட்டவர்கள் வேலை செய்வது தடைசெய்யப்பட்டது.
வர்த்தகம், பொருளாதாரம், காப்புறுதி, வாகன விற்பனை, அரச திணைக்களங்கள், கடைகள் போன்ற துறைகளில் வெளி நாட்டவர்களை வேலைக்கமர்த்துவது தடை செய்யப்படுவதாக ஓமான் நாட்டின் தொழிலமைச்சு அறிவித்திருக்கிறது. வாகன ஓட்டுவதற்கும் ஓமான் குடிமக்களை மட்டுமே வேலைக்கமர்த்தலாம். ஏற்கனவே இத்துறைகளில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களின் விசாக்கள் புதுப்பிக்கப்படமாட்டாது.
கடந்த வருடம் முதற்பகுதியில் ஓமான் தனது நாட்டு மக்களிடையே நிலவும் வேலையில்லாத் திண்டாத்தை ஓழிக்கவும், நாட்டின் பொருளாதார நிலையைச் சீர்ப்படுத்துவதற்குமான நடவடிக்கைகளிலொன்றாக வெளி நாட்டவர்களை வேலைக்கமர்த்துவதைக் கணிசமாகக் குறைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த ஆரம்பித்தது. அரசாங்கத் திணைக்களங்கள், நிறுவனங்களில் முற்றாக வெளி நாட்டவர்களை வேலைக்கு எடுக்காமலிருக்கப் போவதாக அறிவித்தது.
வளைகுடா நாடுகளில் சுமார் 25 மில்லியன் வெளி நாட்டவர்கள் வாழ்கிறார்கள். ஏற்கனவே சர்வதேசச் சந்தையில் எரிநெய் விலை குறைந்து வருவதால் பாதிக்கப்பட்ட இந்த நாடுகளில் பொருளாதாரங்கள் கொரோனாத் தொற்றால் மேலும் பாதிக்கப்பட்டன. ஓமான் அரசின் பொருளாதாரம் 10 விகிதத்தால் சுருங்கியிருப்பதாகத் தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்