ஜோ பைடன் பதவியேற்பு, திரிபுபடுத்தும் வலதுசாரி கானொன் அமைப்புக்கு ஒரு மரண அடி!
டொனால்ட் டிரம்ப்பை தமது தீர்க்கதரிசி, இரட்சகர் என்று கருதி, அவர் சொல்பவைகளையெல்லாம் வரிக்குவரி நம்பிவந்த கானொன் [QAnon] அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாங்கள் நம்பிவந்த தீர்க்கதரிசனம் நிறைவேறாததால் குழம்பிப்போயிருக்கிறார்கள்.
சில வருடங்களுக்கு முன்பிருந்து ‘சாத்தானை வழிபடும், சர்வதேச ரீதியில் பாலர்களைப் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்தி வரும் ஒரு இரகசியக் குழு அமெரிக்காவின் அதிகார பீடங்களையும், ஊடகங்களையும் கைப்பற்றித் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்,’ என்ற நம்பிக்கையைக் கானொன் அமைப்பினர் பரப்பி வருகிறார்கள். அதன் மூலம் எங்கிருந்து ஆரம்பித்தது என்று தெரியாவிட்டாலும் அது ஒரு இயக்கமாக அமெரிக்காவுக்கு வெளியேயும் பரப்பப்பட்டு வருகிறது.
கானொன் இயக்கம் சமூகவலைத்தளங்களில் மூடப்பட்ட குழுக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது. உலகில் நடக்கும் பலவற்றையும் “அவைக்குப் பின்னால் ஒரு திட்டம் இருக்கிறது, அது எங்கள் மீது கட்டுப்பாட்டை அதிகரித்துகொள்வதற்காகவே இவைகளைச் செய்கிறது,” என்று விளக்கமளித்துக் கொள்கிறார்கள். உதாரணமாக, கொரோனாத் தொற்று, அதற்கான தடுப்பு மருந்து கொடுத்தல் எல்லாமே திட்டமிட்டு ஒரு நரித்தந்திர நோக்குடன் இயக்கப்படுகிறது என்று நம்புகிறார்கள்.
டொனால்ட் டிரம்ப் தன்னிஷ்டப்படி சொல்பவைகள் எல்லாமே கானொன் குழுவினருடைய திரிபுபடுத்தப்பட்ட நம்பிக்கைகளுடன் பொருந்தியிருக்கவே, அவர்தான் தங்களுக்குத் தலைமை தாங்கி உலகை “தீய சக்திகளிடமிருந்து காப்பாற்ற வந்த இரட்சகர்” என்று நம்ப ஆரம்பித்திருந்தார்கள். ஜனாதிபதித் தேர்தல் “யாராலோ” திட்டமிட்டுக் களவெடுக்கப்பட்டது என்ற டிரம்ப்பின் ஆதாரமில்லாத கருத்தும் அவர்களுக்கு நம்ப இயலக்கூடியதாகியது. எனவே, அந்தத் தீய சக்திகளைத் டிரம்ப் தனது பரிசுத்த சக்தியால் தெளிவுபடுத்து உலகுக்கு “உண்மையை” அறியத்தருவார் என்று எதிர்பார்த்திருந்தார்கள் கானொன் அமைப்பினர்.
ஜனவரி 20 திகதிப் பதவியேற்பு நாளன்று டொனால்ட் டிரம்ப் தீய சக்திகளையெல்லாம் அடையாளம் காட்டிக்கொண்டு, பைடன் மற்றும் அவரது கட்சிக்காரர்களை எல்லாம் அந்தத் தீய இரகசியக் குழுவின் கைப்பொம்மைகளே என்று ஆதாரம் காட்டியபடி வெளிவருவார் என்று கானொன் விசுவாசிகள் நம்பியிருந்தார்கள்.
புதிய அமெரிக்க ஜனாதிபதிப் பதவியேற்பு நிகழ்ச்சி பிரச்சினைகளின்றி நடந்ததால் கானொன் ஆதரவாளர்களிடையே சமூகவலைத்தளங்களில் பலத்த குழப்பம் ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. “எல்லாமே பொய்யா?” போன்ற கேள்விகளும், “என்ன நடக்கிறது, எங்களை ஏமாற்றி விட்டார்களா?” போன்ற கேள்விகளும் எதிரொலிக்கின்றன. “மூன்று நாட்களுக்குப் பின்னர் தான் யேசு உயிர்த்தெழுந்தார், எனவே பொறுமையாகக் காத்திருங்கள்,” என்று தொடர்ந்தும் தமது விசுவாசத்தில் வாழவும் சிலர் விரும்புகிறார்கள்.
டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவில் நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பீடுகளில் 17 % விகிதமானோர் “சாத்தானை வழிபடும், சர்வதேச ரீதியில் பாலர்களைப் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்தி வரும் ஒரு இரகசியக் குழு அமெரிக்காவின் அதிகார பீடங்களையும், ஊடகங்களையும் கைப்பற்றித் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்,” என்பதை நம்புகிறார்கள். 37 விகிதமானோர் அது உண்மையா, பொய்யா என்று தெரியாமல் யோசிக்கிறார்கள் என்று தெரியவருகிறது.
கானொன் விசுவாசிகளில் தாம் ஏமாற்றப்பட்டதாக நம்புகிறவர்கள், உண்மையா பொய்யா என்று தெரியாமல் தடுமாறுகிறவர்கள் எதிர்காலத்தில் வன்முறையைத் தீவிரமாகத் தமது கோட்பாடாகக் கொள்ளலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள். அமெரிக்காவின் உளவுத்துறையும் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் போன்றவர்களுக்குத் தொடர்ந்தும் நீண்ட காலத்துக்கு ஆபத்து உண்டாகலாம் என்று கருதி எச்சரிக்கிறது. அதே போலவே வாஷிங்டனும் தொடர்ந்தும் கடுமையான பாதுகாப்புடன் கண்காணிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்