அமெரிக்க பத்திரிகையாளரைக் கடத்திச் சென்று சிரச்சேதம் செய்தவர்களைப் பாகிஸ்தானிய உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.
வால் ஸ்டிரீட் ஜேர்னல் பத்திரிகையாளர் டேனியல் பேர்ல் இஸ்லாமியத் தீவிரவாதிகளைப் பற்றிய தனது ஆராய்வுகளுக்காகப் பாகிஸ்தானுக்குப் போயிருந்தார். 2002 இல் அவரைக் கராச்சியில் கடத்திச் சென்று கொன்ற அஹமத் ஒமார் சாயித் ஷேய்க்கையும் அவனது கூட்டாளிகளையும் பாகிஸ்தானிய உச்ச நீதிமன்றம் உடனடியாக வெளியே விடும்படி தீர்ப்பளித்திருக்கிறது.
ஷேய்க்கும், மேலும் மூவரும் டேனியலைக் கடத்திச் சென்று சுமார் ஒரு மாத காலத்துக்கு வைத்திருந்து வெவ்வேறு விதமான கப்பத் தொகைகள் கேட்டு வந்தார்கள். அதன் பின்னர் அவரைச் சிரச்சேதம் செய்ததைப் படமாக எடுத்து அமெரிக்கத் தூதுவராலயத்திற்குக் கிடைக்கச் செய்திருந்தார்கள்.
பிரிட்டனில் பிறந்த பாகிஸ்தானியான அஹமத் ஒமார் சாயித் ஷேய்க் தான் டேனியல் பேர்லைக் கடத்துவதற்கான திட்டங்களை வகுத்து மேலும் மூன்று பேரை அதற்காகப் பயன்படுத்தினான் என்று குறிப்பிடப்படுகிறது. எல்லோரும் கைது செய்யப்பட்டு சுமார் இருபது வருடங்களாக விசாரணைக்காகச் சிறையிலடைக்கப்பட்டிருந்தார்கள்.
கடந்த மாதமே அஹமத் ஒமார் சாயித் ஷேய்க்கை நீதிமன்றமொன்று கொலைக் குற்றத்திலிருந்து விடுதலை செய்திருந்தது. கடத்தல் போன்ற குற்றங்களுக்காக மட்டுமே அவன் தீர்ப்பிடப்பட்டான். மற்றைய மூவரும் சமூகத்துக்கு ஆபத்தானவர்களென்று குறிப்பிட்டு நீதிமன்றம் வெளியே விட மறுத்திருந்தது.
டேனியலின் பெற்றோரின் வேண்டுதலுக்கிணங்கி அமெரிக்க அரசு பாகிஸ்தானிய நீதிமன்றத்திடம் அஹமத் ஒமார் சாயித் ஷேய்க் குற்றவாளியென்பதை அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரிக்கத் தயாரென்று குறிப்பிட்டிருந்தார்கள். பாகிஸ்தான் அரசிடமும் இதுபற்றித் தொடர்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
28.01 வியாழனன்று பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றம் அவனை நிரபராதி என்றும், தொடர்ந்தும் சிறையில் வைத்திருக்கலாகாது என்றும் தீர்ப்பளித்திருப்பது தம்மை அதிரவைத்திருக்கின்றது என்று டேனியலின் பெற்றோர்கள் குறிப்பிட்டுத் தமது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள். அவன் சிறையிலிருந்து வெளியேறுவானா என்பது பற்றி இன்னும் விபரங்கள் தெரியவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்