எமிரேட்ஸ் அரசின் கைக்கெட்டியது வாய்க்கெட்டமுதல் புடுங்கிவிட்டார் பைடன்.

சுமார் 23 பில்லியன் டொலர்கள் பெறுமதிக்கு எமிரேட்ஸ் அரசுக்கு F-35 போர் விமானங்களை விற்பதாக உறுதி கொடுத்தது டொனால்ட் டிரம்ப் அரசின் மிகவும் முக்கியமான சாதனைகளில் ஒன்றாக விளம்பரப்படுத்தப்பட்ட வியாபாரமாகும். ஜோ பைடன் அந்த ஒப்பந்தத்தை தற்போதைக்கு ஒதுக்கி வைத்திருக்கிறார்.

நீண்ட காலமாகவே எமிரேட்ஸ் அரசு  F-35 ரக போர் விமானங்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குவதற்கு முயற்சிகள் செய்து வந்திருந்தது. ஆனாலும், சர்வாதிகார அரசும், யேமனில் போரிட்டுப் பெரும் மனித குல நாசம் செய்துகொண்டிருக்கும் நாடுமான எமிரேட்ஸுக்கு அதை விற்க அமெரிக்கா உடன்படவில்லை. அத்துடன் அரபு நாடொன்றுக்குத் தொழில்  நுட்ப ரீதியில் அதியுக்திகளைக் கொண்ட நவீன ரகப் போர் விமானங்களைக் கொடுப்பதன் மூலம், தனது செல்லப்பிள்ளை நாடான இஸ்ராயேலுக்கு ஈடாக அரபு நாடுகள் பலமாகிவிடக்கூடாதென்றும் அமெரிக்கா கவனமாக இருந்தது.

ஆனால், மத்திய கிழக்கிலிருக்கும் சுன்னி முஸ்லீம் நாடுகளை இஸ்ராயேலுடன் நெருங்கவைத்து, ஈரானுக்கு எதிரான ஒரு அணியை உண்டாக்குவதன் மூலம் இஸ்ராயேலின் அனுமதியுடன் டொனால்ட் டிரம்ப் எமிரேட்ஸுக்கு F-35  ரக போர் விமானங்களை விற்க ஒத்துக்கொண்டார் டிரம்ப்.

எமிரேட்ஸுக்கு நவம்பர் மாத அளவில் கொடுக்கப்பட்ட அந்த உறுதிமொழிக்கான ஒப்பந்தம் டொனால்ட் டிரம்பின் ஜனாதிபதிப் பதவியிறங்களுக்குப் பதினொரு மணித்தியாலத்துக்கு முன்னர் தான் அவசர அவசரமாக, இரகசியமாகக் கைச்சாத்திடப்பட்டிருக்கிறது. 

கைச்சாத்திடப்பட்ட அந்த ஒப்பந்தத்தைத் தற்போது ஒதுக்கிப் போட்டிருக்கிறார் ஜோ பைடன். மத்திய கிழக்கு அரசியல், யேமனில் சவூதி அரேபியா+நட்பு நாடுகள் நடத்திவரும் போர், பாலஸ்தீனப் பிரச்சினைகளுக்கான தீர்வு, ஈரான் சம்பந்தமான அமெரிக்காவின் அரசியல் நிலைப்பாடு ஆகியவைகளை பைடன் மறுபரிசீலனை செய்து வித்தியாசமான முறையில் அணுகப்போகிறார் என்பதைக் காட்டும் இன்னொரு நகர்வே இது என்று தெரிவதாக அரசியல் வட்டாரத்தில் கணிக்கப்படுகிறது.

அதேசமயம் ஆபிரகாம் ஒப்பந்தம் என்று குறிப்பிடப்படும் இஸ்ராயேலுடன் அரபு நாடுகள் நெருங்கி உறவாடவைக்கத் திட்டமிடப்பட்ட டிரம்ப்பின் சாதனைகளைப் பற்றியும் பைடனின் இந்த நகர்வு கேள்விகளை எழுப்புகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *