அமெரிக்காவில் சுமார் 50 க்கும் அதிகமானோர் சூறாவளிக்காற்றால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

தென்மேற்கு கெண்டக்கி மாநிலத்தைச் சூறாவளிக்காற்றுத் தாக்கியதில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அப்பிராந்திய அரசு குறிப்பிட்டிருக்கிறது. ஆர்கன்ஸாஸ், இல்லினோய், கெண்டக்கி, மிசூரி, டென்னஸி மாநிலங்களைச் சுமார் 26 சூறாவளிகள் தாக்கியிருக்கின்றன.

கென்டக்கி மாநிலத்தில் மேபீல்ட் நகரில் ஒரு தொழிற்சாலையின் கூரையே புடுங்கப்பட்டிருக்கிறது. “மீட்புப் பணிகள் முடியும்போது சுமார் 50 பேருக்கும் அதிகமாக இறந்திருப்பார்கள் என்ற புள்ளிவிபரத்தை எதிர்பார்க்கலாம்,” என்கிறார் அந்த மாநில ஆளுனர். மேபீல்ட் நகரைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் இறப்புக்கள் மிக அதிகம் என்றார் அவர். அந்தப் பிராந்தியச் சிறை, நீதிமன்றம் ஆகியவையும் சூறாவளியால் தாக்கி அவற்றின் பகுதிகள் இடிந்து விழுந்திருக்கின்றன.

மடிசன்வில் நகரில் ஓடிக்கொண்டிருந்த ரயில் தண்டவாளத்திலிருந்து விலகி விபத்துக்குள்ளாகியிருக்கிறது. பக்கத்து நகர்களிலும் சூறாவளிகள் பெரும் சேதங்களை விளைவித்திருக்கின்றன. ஆர்கென்ஸாஸில் முதியோர் இல்லமொன்றின் கூரை தூக்கியெறியப்பட்டதால் ஒருவர் இறந்து சிலர் காயப்பட்டிருக்கிறார்கள்.

புயல், சூறாவளிக்காற்று ஆகியவை சனியன்று மாலையில் தமது வேகத்தால் குறையும். அதன் பின்னரே விபரமாக அழிவுகள், இறப்புக்கள் போன்றவை பற்றித் தெரியவரும் என்று அமெரிக்க வாநிலை அவதான நிலையம் தெரிவித்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்