மரடோனாவின் மணிக்கூட்டை டுபாயில் திருடியவனை இந்தியாவில் பொலீஸ் கைது செய்திருக்கிறது.

உதைபந்தாட்ட வீரர் மரடோனாவுக்காகப் பிரத்தியேகமாக Hublot சுவிஸ்  நிறுவனம் தயாரித்த கைமணிக்கூடு ஒன்றைக் களவெடுத்ததாக அஸாமில் ஒருவனை இந்தியப் பொலீஸ் கைது செய்திருக்கிறது. வசீத் ஹூசேய்ன் என்ற அந்த 37 வயதுக்காரர் டுபாயில் 2016 லிருந்து ஒரு பாதுகாப்பு நிறுவனத்தில் வேலை செய்திருக்கிறான்.

டியேகோ மரடோனாவின் நினைவுப்பொருட்களை டுபாயில் வசீத் ஹுசேய்ன் வேலை செய்த நிறுவனம் பாதுகாப்பில் வைத்திருந்தது. சுமார் 26,500 டொலர் பெருமதியான அந்த மணிக்கூட்டின் பின் பக்கத்தில் மரடோனாவின் படமும், சட்டை இலக்கமான 10, கையெழுத்து ஆகியவை பொறிக்கப்பட்டிருக்கின்றன.

டுபாய் பொலீஸ் கொடுத்த துப்பு மூலமே வசீத் ஹூசேய்னை இந்தியப் பொலீஸ் கைது செய்திருக்கிறது. தனது தந்தை சுகவீனமுற்றதாலேயே தான் நாட்டுக்குத் திரும்பியிருப்பதாகக் கூறும் அவன் குற்றத்தை மறுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்