வயாகரா குளிகைகள் மூலம் அல்ஸைமர் வியாதியைப் பெருமளவில் குறைக்கலாம் என்கிறது ஆராய்ச்சி.

கிளிவ்லாண்ட் பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின்படி வயாகரா குளிகைகளிலிருக்கும் sildenafil என்றழைக்கப்படும் மருந்து வயதானவர்களைப் பெரிதும் தாக்கும் அல்ஸைமர் வியாதியைக் குணப்படுத்த உதவுவதாக் Nature Aging சஞ்சிகையில் வெளிவந்திருக்கிறது. ஆண்மையின்மையைக் கையாள வயாகரா உட்பட்ட sildenafil மருந்து இருக்கும் குளிகைகள் பாவிக்கப்படுகின்றன.

ஆராய்ச்சியாளர்கள் இதற்காக ஏழு மில்லியன் வயதானவர்களைத் தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறார்கள். அவர்களில் sildenafil உள்ள மருந்துகளைப் பாவிப்பவர்கள் மறதி வியாதியான அல்ஸைமரால் பாதிக்கப்படுவது 69 விகிதம் குறைவாக இருக்கிறது. 

ஆண்குறியை விறைக்கவைப்பதற்காகப் பாவிக்கப்பட முன்னர் வயாகரா இரத்தச் சுற்றோட்டத்தை வேகப்படுத்த உதவும் மருந்தாகவே கண்டுபிடிக்கப்பட்டது. இரத்த நாளங்கள் சுவாசப்பைக்கு அளவுக்கதிகமான இரத்த அழுத்தம் கொடுக்கும் வியாதியுள்ளவர்களுக்கும் sildenafil மருந்துகள் பாவிக்கப்படுகின்றன.

வயதானவர்கள் பெருமளவில் தாக்கப்படும் அல்ஸைமர் வியாதி இரத்த நாளங்கள் மூளைக்கு இரத்தத்தைச் செலுத்துவது குறைவதனாலேயே ஏற்படுகிறது. தேவையான இரத்தம் கிடைக்காததால் மூளையின் செயற்பாடு குறைந்துவிடுகிறது.

அந்த வியாதியைச் சுகப்படுத்துவதற்கு பாவிப்பிலிருக்கும் மருந்துகள் எதுவாவது உதவுமா என்பதை ஆராய முற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் 1,600 மருந்துகளைப் பாவிப்பவர்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து வந்தார்கள். இதற்காக மில்லியனுக்கும் அதிகமானவர்களின் மருத்துவப் பாவனையும், விளைவுகளும் தொடர்ந்து ஆறு வருடங்களுக்குக் கவனிக்கப்பட்டு வந்ததாக பெய்க்சோங் செங் என்ற ஆராச்சியாளர் தெரிவித்தார்.

மேற்கண்ட ஆராய்ச்சி எதனால் sildenafil மருந்துகள் அல்ஸைமர், டிமென்ஸியா போன்ற மறதிவியாதி வராமல் காப்பாற்றுகின்றன என்ற கேள்விக்கு விடையளிக்கவில்லை. எனவே, அதைக் கண்டுபிடிப்பதற்காக அந்த மருந்துகளை நேரடியாகப் பாவிக்கவைத்து அதன் விளைவுகளைக் கண்காணிப்பது அடுத்த கட்டமாக இருக்கும் என்று குறிப்பிட்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்