உதைபந்தாட்டத்துக்கான ஆபிரிக்க வெற்றிக் கோப்பையை முதல் தடவையாகத் தனதாக்கியது செனகல்.
ஞாயிறன்று கமரூனில் நடந்தேறியது ஆபிரிக்கக் கோப்பைக்கான இறுதிப் போட்டி. எட்டாவது தடவையாக அதைத் தனதாக்கக் களத்திலிறங்கிய எகிப்து அணியை அக்கோப்பையை முதல் தடவையாக அடைந்துவிடவேண்டுமென்ற ஆவலுடன் நேரிட்டது செனகல் அணி. நீட்டப்பட்ட நேரத்திலும் எவரும் வெல்ல முடியாத நிலையில் கடந்த இரண்டு மோதல்களும் போலவே வலைகாப்பாளர்களின் பிரத்தியேக பலத்தைப் பரீட்சிப்பதில் முடிந்தது. செனகல் அணியினர் 4 – 2 மூளம் வென்று தமது நாட்டு உதைபந்தாட்ட ரசிகர்களின் தாகம் தீர்த்து வைத்தனர்.
சரிபலமான இரண்டு அணிகள் மோதிய நரம்புகளை முறுக்கும் அந்த விளையாட்டு ரசிகர்களுக்குப் பெரும் விருந்தைத் தந்தது.
லிவர்பூல் அணியில் விளையாடும் நட்சத்திரத் தோழர்கள் மூ சாலேயும் சாடியோ மனேயும் எதிரெதிர் அணியில் கோப்பைக்காக மோதப்போவதைக் காண ஆவலாக இருந்தவர்களை அவ்விருவரும் ஏமாற்றவில்லை. திறமையான அவர்களிருவரும் உட்பட இரண்டு அணிகளின் விளையாட்டு நுட்பத்தை 90 நிமிடங்களுக்கு மட்டுமன்றி நீட்டப்பட்ட நேரத்திலும் கண்டு களிக்கக்கூடியதாக இருந்தது.
“உலகிலேயே கௌரவமான வெற்றியாக இதை நினைக்கிறேன். இதைத் தவிர நான் வென்ற மற்றவைகளெல்லாம் வலிய வந்தவைகளென்பதே என் கருத்து,” என்று செனகலுக்குத் தங்கக் கோப்பையைக் கொடுத்த அந்த வெற்றி கோலைப் போட்ட சாடியோ மனே மோதலுக்குப் பின்னர் பெருமையுடன் குறிப்பிட்டார். மட்டுமன்றி செனகல் குழுவின் பயிற்சித் தலைவர், பெரிதும் விமர்சிக்கப்பட்ட, அலியூ சிஸ்ஸிக்கும் இவ்வெற்றி பிரத்தியேகப் பெருமையையே.
ஆபிரிக்கக் கோப்பை இறுதிப் போட்டியில் கமரூன் அணியுடன் 2002 இல் விளையாடி இரண்டு அணிகளுக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் முடிந்தது. செனகல் அணியின் பயிற்றுவிப்பு நிர்வாகி அலியு சிஸ்ஸி அச்சமயத்தில் அணியில் விளையாடிக்கொண்டிருந்தவர். கமரூன் அணியின் வலைக்குள் குறிபார்த்து உதைக்கும்போது அதைத் தவறவிட்டதால் அச்சமயத்தில் செனகல் அக்கோப்பையைக் கைப்பற்ற முடியவில்லை. அந்த ஆதங்கத்தை இந்த வெற்றியில் தீர்த்துக்கொண்டார்.
எகிப்தின் நட்சத்திரம் மூ சாலேக்குத் தனது நாட்டுக்காகத் தங்கக் கோப்பையை வெல்லக் கிடைத்த இரண்டாவது சந்தர்ப்பம் இது. அதை வெல்ல முடியாமல் போனதில் அவருக்கு ஏமாற்றமே.
சாள்ஸ் ஜெ. போமன்