தமது ரசிகர்களுக்கு ஆறுதல் பரிசாக மூன்றாமிடத்தைப் பெற்றெடுத்தது கமரூன் அணி.

கமரூனில் நடந்துவரும் ஆபிரிக்க தேசிய அணிகளிடையேயான உதைபந்தாட்டக் கோப்பைக்கான போட்டியில் மூன்றாவது இடத்தைப் கைப்பற்றியது கமரூன். மோதலின் இறுதியில் 3 – 3 என்ற நிலைப்பாட்டில் எந்த அணியும் 90 நிமிடங்களுக்குள் வெற்றியெடுக்காமலிருக்கவே குறிபார்த்து எதிரணியினரின் வலைக்குள் பந்தை உதைக்கும் நிலை உண்டாகியது. அச்சமயத்தைப் பயன்படுத்தி கமரூன் அணியினர் 5 – 3 என்ற வித்தியாசத்தில் வெற்றிகொண்டனர்.

எதிரணியான புர்க்கினோ பாசோ மோதலின் முதல் பாதியிலேயே 2 – 0 என்ற நிலைக்குக் கமரூனை உதைத்துத் தள்ளியிருந்தது. இரண்டாம் பாதியின் முதல் பகுதியில் கமரூனின் வலைக்காப்பாளர் ஆந்திரே ஒனானா புர்க்கினோ பாசோவின் ஸ்டீவ் யாகோ அடித்த பந்தைத் தடுக்க முயன்று பதிலாக அதைத் தானே வலைக்குள் தள்ளிவிட நிலைப்பாடு 3 – 0 என்றானது. 

அந்த நிலையில் மோதல் முடிந்துவிட்டது என்றே கருதக்கூடியதாக இருந்தது. மனம் தளராத கமரூன் அணியினரோ, தமது சொந்த நாட்டு ரசிகர்களின் வெம்மையான ஆதரவுத் தென்றலுடன் புத்துணர்ச்சியுடன் விளையாட ஆரம்பித்தார்கள். சுமார் 48 மணி நேரத்துக்கு முன்னர் எகிப்திய அணியினருடன் மோதி 120 நிமிடங்களாக 0 – 0 நிலையைக் கைப்பற்றிக் கடைசியில் வலைக்குள் பந்தை அடிக்கும் நிலையில் வெற்றியை இழந்த அவர்கள் சோர்ந்துவிடவில்லை.

நடந்துகொண்டிருக்கும் மோதல்களில் அதிகமான தடவைகள் கோல்கள் போட்ட முதலிரண்டு பேரையும் கொண்ட அணியே கமரூன். வின்சண்ட் அபூபக்கர் தனது அணிக்காக இரண்டு தடவை எதிரணியின் வலைக்குள் பந்தை உதைத்துத் தள்ளினார். அத்துடன் 8 கோல்களை இந்தத் தொடரில் போட்டதன் மூலம் ஆபிரிக்கக் கோப்பைகளின் சரித்திரத்தில் கடந்த 48 வருடங்களில் அதிக கோல்களைப் போட்டவர் என்ற இடத்தையும் அவர் பெற்றுக்கொண்டார். 

மோதலின் 90 வது நிமிடத்தில் கமரூனின் அம்புரோஸ் ஒயோங்கோ புர்க்கினோ பாசோவுக்கு எதிராக தனது பங்குக்கு ஒரு கோலைப் போட கமரூன் அணி தோல்வியடையாமல் நிலைமையை 3 – 3 என்றாக்கியது. அதையடுத்தே இரண்டு அணிகளுடைய வலைக்காப்பாளர்களுக்கும் பரீட்சை உண்டாகியது.

அந்தச் சந்தர்ப்பத்தை வாகாகக் கைப்பற்றி கமரூன் தமது நாட்டுக்கு மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொடுத்தனர்.

சாள்ஸ் ஜெ. போமன்