நோர்வேயில் ஆரம்பிக்கும் நாட்டோ-பயிற்சிகள், வெளியாரான சுவீடனும், பின்லாந்தும் பங்குபற்றுகின்றன.
30 நாடுகளைச் சேர்ந்த சுமார் 30,000 இராணுவத்தினர் பங்கெடுக்கும் நாட்டோ அமைப்பின் போர்ப்பயிற்சியொன்று இன்று நோர்வேயின் வெவ்வேறு இடங்களில் ஆரம்பமாகின்றன. நாட்டோ அமைப்பின் அங்கத்துவர்கள் அல்லாத சுவீடனும், பின்லாந்தும் தமது 1,600, 680 இராணுவத்தினரை அந்தப் பயிற்சிகளின் பங்கெடுக்க அனுப்பியிருக்கின்றன. “நாட்டோ-வின் கூட்டுறவு நாடுகள் என்ற வகையில் அவ்விரு நாடுகளும் அப்பயிற்சிகளின் பங்கெடுக்கின்றன.
நீண்ட காலத்துக்கு முன்னரே திட்டமிடப்பட்ட Cold Response என்ற இந்த இராணுவப் பயிற்சிகள் பற்றி ரஷ்யாவுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததாக நோர்வேயின் பாதுகாப்பு அமைச்சர் ஒட் ரூகர் எனூக்சன் தெரிவித்தார். பயிற்சிகளின் சில பாகங்கள் நோர்வே – ரஷ்ய எல்லையில் நடக்கவிருக்கின்றன. ரஷ்யாவும் அதன் கூட்டுறவு அமைப்பும், நாட்டோவும் நீண்ட காலமாகவே தத்தம் பயிற்சிகளைப் பற்றி எதிர்த்தரப்பாருக்கு அறிவித்து அவர்களுடைய பிரதிநிதிகளைப் பார்வையாளர்களாகவும் அழைக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளன. நோர்வேயில் நடக்கும் தற்போதையப் பயிற்சிகளுக்குப் பார்வையாளர்களை அனுப்ப ரஷ்யா மறுத்துவிட்டது.
நாட்டோ அமைப்பில் அங்கத்துவரல்லாத சுவீடனும், பின்லாந்தும் கடந்த சில வருடங்களாகவே அவ்வமைப்பின் இராணுவப் பாதுகாப்பு, போர்ப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. பக்கத்து நாடுகளான சுவீடனும், பின்லாந்தும் தமக்கிடையேயான பாதுகாப்புத் திட்டங்களை மேம்படுத்திக்கொள்ளவும், தமது இராணுவத்தினருக்குப் புதிய போர்ப்பயிற்சிகளைக் கொடுக்கவும் இப்படியான பயிற்சிகளைப் பாவித்து வருகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்