நெதர்லாந்திலும், சுவீடனிலும் இரகசியப் பொலீஸ் நிலையங்கள் சீனாவால் இயக்கப்படுகின்றனவா?

சீனாவின் மனித உரிமை மீறல்களைக் கண்காணித்து வெளியிடும் இயக்கமான Safeguard Defenders சீனா இரகசியமான பொலீஸ் நிலையங்களை ஐரோப்பிய நகரங்கள் சிலவற்றில் இயக்கி வருவதாகச் செய்திகளை வெளியிட்டிருக்கிறது. அந்த நிலையங்களின் குறிக்கோள் சீனாவின் அரசுக்கு எதிராக இயங்குகிறவர்களை நாட்டுக்குத் திரும்பச் செய்து அங்கே நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிப்பதாகும் என்று குறிப்பிடப்படுகிறது.

 நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம், ரொட்டர்டாம் நகரங்களில் 2018 ம் ஆண்டு முதலேயே சீனா இரண்டு “காவல் நிலையங்களை” இயக்கி வருவதாகத் தமக்குத் துப்புகள் கிடைத்திருப்பதாகவும் அதுபற்றித் தாம் ஆராய்ந்து வருவதாகவும் நெதர்லாந்தின் வெளிவிவகாரக் காரியாலயம் குறிப்பிடுகிறது. அப்படியான சீனக் காரியாலயங்களுக்கு நெதர்லாந்து அனுமதி கொடுக்கவில்லையென்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

கனடாவின் டொரொண்டோ நகரில் மூன்று சீனக் காரியாலயங்கள் காவல் நிலையங்களாக இயங்குவதாகத் தெரியவந்து கனடிய அரசு அதுபற்றிய விசாரணைகளை ஆரம்பித்திருக்கிறது.

சுவீடனின் தலைநகரான ஸ்டொக்ஹோம் நகரில் சீனாவின் காவல் நிலையம் இயங்கிவருவதாகத் தமக்குத் தெரியவந்திருப்பதாக சுவீடனின் வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கிறது. அந்தக் காரியாலயத்துடன் ஒரு ஹோட்டலும் இணைக்கப்பட்டிருப்பதாக சுவீடன் செய்திகள் குறிப்பிடுகின்றன.

குறிப்பிட்ட சீனாவின் “காவல் நிலையங்கள்,” அந்தந்த நாட்டில் வாழும் சீனர்களுக்குத் தேவையான ராஜதந்திர ஆலோசனைகளை வழங்குவதாகச் சீனர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றும் ஆனால், உண்மையான நோக்கம் அந்த நாடுகளில் வாழும் சீனர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதாகும். சீன அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுகிறவர்களின் குடும்பத்தினரைச் சீனாவில் தொடர்பு கொள்ளவும் மிரட்டவும் அதன் மூலம் குறிப்பிட்ட நபர்களைச் சீனாவுக்குத் திரும்பிச்செல்ல வைப்பதும் சீனாவின் நோக்கமாகும் என்றும் குறிப்பிடப்படுகிறது.

இதேபோன்ற நடவடிக்கைகளில் சீனா சுமார் 30 நாடுகளில் ஈடுபடுகிறது என்றும் குறிப்பிடப்படுகிறது. தமது காவல் நிலையங்கள் பற்றியும், அவற்றின் நடவடிக்கைகள் பற்றியும் வெளியாகியிருக்கு செய்திகளைச் சீனா கடுமையாக மறுக்கிறது. கொரோனாத்தொற்றுக் காலத்தில் வெளிநாடுகளில் வாழும் தமது நாட்டின் குடிமக்கள் வெவ்வேறு விதமான பிரச்சினைகளை எதிர்நோக்கியதாகவும் [சீனாவின் சாரதிச் சான்றிதழ்கள் புதுப்பித்தல், திட்டமிட்டபடி நாடு திரும்ப முடியாதவர்களுக்கு உதவுதல்] அவற்றை எதிர்கொள்ளவே தாம் உதவி நிலையங்களை வைத்திருப்பதாகவும் சீனாவின் வெளி நாட்டுத் தூதுவராலய அதிகாரியொருவர் தெரிவித்திருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *