தேர்தல் முடிந்து மூன்றாம் நாளில் சுவீடன் மக்கள் வலதுசாரிகளைத் தெரிவுசெய்திருப்பது தெரியவந்தது.

சுவீடனின் முதலாவது பெண் பிரதமராகிய மக்டலேனா ஆண்டர்சனின் ஆட்சிக்காலம் ஒரு வருடம் கூட நிலைக்கவில்லை. வழக்கம் போலவே நாலு வருடத்துக்கொருமுறை நடக்கும் தேர்தல் செப்டெம்பர் 11 இல் நடந்தது. கடந்த தேர்தலைப் போலவே எந்தக் கட்சியும் முழுசாக வெல்ல முடியாத இத்தேர்தலில் வலதுசாரி அணிகளின் பகுதி மொத்தமாக அதிக பாராளுமன்ற இடங்களைப் பிடித்திருக்கிறது. தேர்தல் நாளிலேயே ஓரளவு கணிக்கப்பட்டாலும் அறுதியான முடிவுகளுக்காகச் சகல வாக்குகளையும் எண்ணி முடிக்கவேண்டியிருந்தது.

2018 இல் நடந்த தேர்தலின் பின்னர் சுமார் ஒரு வருடத்தின் பின்னரே ஒரு அரசாங்கம் அமைக்க முடிந்தது. அது மயிரிழையில் பல தடவைகள் நடந்து ஒரு வழியாகத் தனது காலத்தை நிறைவேற்றியது. சிறிய கட்சிகள் சிலவற்றின் ஆதரவுடன் சுவீடனின் சோஷியல் டெமொகிரடிக் கட்சியினரின் பெரும்பான்மையற்ற அந்த அரசுக்காலத்தில் நாட்டின் பிரதமரும் மாறினார். சோஷியல் டெமொகிரடிக் கட்சியின் புதிய தலைவராகி, நாட்டின் முதல் பெண் பிரதமராகினார் மக்டலேனா ஆண்டர்சன். 

இந்தத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது ஆண்டர்சன் தலைமையிலான அரசுக்கு ஆதரவளித்து வந்த சிறிய கட்சிகள் தமது ஆதரவை, சுவீடன் டெமொகிரடிக் கட்சி என்ற தேசிய, பழமைவாதிகளிடம் கணிசமாக இழந்திருந்தன என்பது தெரியவந்தது. அக்கட்சியினர் சுமார் 21.6 விகித வாக்குகளைப் பெற்று முதல் தடவையாக நாட்டின் இரண்டாவது இடத்தையும் பெற்றிருக்கிறார்கள். வழக்கமாக அவ்விடத்தைப் பெற்றுவந்த வலதுசாரிக் கட்சியினரால் 20 % வாக்குகளையே பெறமுடிந்திருக்கிறது.  

வலதுசாரிகள், பழமைவாதிகளுடைய பக்கத்தில் மேலுமிரண்டு சிறிய கட்சிகளையும் கொண்ட கூட்டணி சுமார் 50 விகிதமான வாக்குகளைப் பெற்றுப் பாராளுமன்றத்தில் 176 இடங்களைப் பெற்றிருக்கின்றன. இடதுசாரிகளும் அவர்களும் ஆதரவாளர்களும் பெற்ற இடங்கள் 173 மட்டுமே. இந்த நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு இன்று வியாழனன்று தான் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ஆண்டர்சன் தெரிவித்தார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *